தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்து துறை குறித்த பல்வேறு அறிவிப்புகளையும் விளக்கங்களையும் கொடுத்தார். அவர் பேசும்போது, கட்டணமில்லா பேருந்துகளில் 20 மாதங்களில் 256.66 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் பயணம் செய்துள்ளனர். கட்டணமில்லா பேருந்து திட்டத்தின் மூலம் மகளிருக்கு ரூ.200 முதல் ரூ.1,500 வரை சேமிப்பு கிடைத்துள்ளது என விளக்கம் அளித்தார்.
அப்போது அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிவிப்பில், SETC பேருந்துகளில் ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு, 6-வது முறை பயணம் முதல், 50% கட்டணச் சலுகை என்று கொடுக்கப்படும் என அறிவித்தார். இந்த சலுகை அனைத்து அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கும் பொருந்தும் எனவும், அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பெண்களுக்கு 4 இருக்கைகள் ஒதுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துளார்.
அமைச்சரின் இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. நீண்ட தொலைவு பயணம் மேற்கொள்ளும் மக்கள் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது. மேலும், அடிக்கடி வெளியூர் செல்பவர்களுக்கும் விரைவு பேருந்து கட்டணங்கள் சுமையாக இருக்கின்றன. இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு அரசு விரைவுப் பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.