வேலூர்: ‘தமிழ்நாடு முழுவதும் உள்ள பாதுகாப்பு இல்லங்களில் சிறுவர்கள் தப்பி செல்லாத வகையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று வேலூரில் ஆய்வு செய்த அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். வேலூர் காகிதப்பட்டறையில் சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் அரசினர் பாதுகாப்பு இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு 18 வயது முதல் 21 வயது வரை குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற 42 பேர் தங்கியுள்ளனர். இதில் 6 பேர், கடந்த 27ம் தேதி இரவு பாதுகாவலரை தாக்கிவிட்டு தப்பினர். அவர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இதேபோல் நேற்று முன்தினம் அதே பாதுகாப்பு இல்லத்தில் ‘ஏ’ பிளாக்கில் உள்ள சிறார்கள் ரகளையில் ஈடுபட்டு பொருட்களை உடைத்து சேதப்படுத்தினர்.
இந்நிலையில் இப்பிரச்னை குறித்து விசாரிக்க தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று வேலூர் வந்தார். கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எஸ்பி ராஜேஷ் கண்ணன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் காகிதப்பட்டறையில் உள்ள பாதுகாப்பு இல்லத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இதைதொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் அளித்த பேட்டியில், ‘தமிழகம் முழுவதும் 8 கூர்நோக்கு இல்லங்கள், 36 குழந்தைகள் பாதுகாப்பு இல்லம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள பாதுகாப்பு இல்லங்களில் சிறுவர்கள் தப்பி செல்லாத வகையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். உரிய வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பு இல்லங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தப்பி சென்றவர்கள் விரைவில் பிடிபடுவார்கள். பாதுகாப்பு இல்லங்களில் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியும் பாதுகாவலர்களுக்கு பணி நிரந்தரம் குறித்து ஆலோசனை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’.
இவ்வாறு அவர் கூறினார்.