திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை அருகே பள்ளபட்டி பகுதியைச் சேர்ந்தவர் தர்மேந்திரன் சர்க்கார். இவர் அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில், தர்மேந்திரன் தனது மனைவி மற்றும் மகளுடன் இருசக்கர வாகனத்தில் மதுரையிலிருந்து திண்டுக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென இருசக்கர வாகனம் நிலை தடுமாறியதால், சாலையின் தடுப்பில் மோதி மூவரும் கீழே விழுந்தனர்.
அந்த நேரத்தில், அந்த வழியாக ஜெட் வேகத்தில் வந்த கண்டெய்னர் லாரியின் பின் சக்கரத்தில் தர்மேந்திரன் சிக்கி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டார். இதனால், அவரது உடல் மனைவி மற்றும் மகள் கண்முன்னே இரண்டு துண்டானது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் கதறி அழுதனர். பின்னர் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் படி, போலீசார் விரைந்து வந்து கண்டெய்னர் லாரியை மடக்கி பிடித்து ஓட்டுனரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.