தீண்டாமை பிரச்னையா : தியேட்டர் நிர்வாகம் விளக்கம் ; ஊழியர்கள் மீது வழக்குபதிவு
நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி இன்று திரையரங்கில் வெளியான திரைப்படம் பத்து தல . இந்த படத்தை காண நரிக்குறவர் இன மக்கள் சென்னை கோயம்பேட்டில் உள்ள பிரபல ரோகிணி திரையரங்கிற்கு வந்துள்ளனர். அப்போது திரையரங்கில் நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்கவில்லை. தீண்டாமையை கடைபிடித்ததாக சர்ச்சை உருவானது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலானது. தியேட்டர் நிர்வாகத்தையும், அந்த ஊழியரையும் வலைதளவாசிகள் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் பரவிய வீடியோவை தொடர்ந்து அவர்களை ஏன் படம் பார்க்க அனுமதிக்கவில்லை என்பது குறித்து குறிப்பிட்ட திரையரங்கம் இப்போது விளக்கம் அளித்துள்ளனர்.
இதுகுறித்து திரையரங்க நிர்வாகம் கூறும்போது, பத்து தல படம் “யு/ஏ” சான்றிதழ் கொண்ட திரைப்படமாகும். 12 வயது குறைவான சிறுவர்கள் இந்த படத்தை காண அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த மக்கள் தங்களுடன் 10 வயதிற்குட்பட்ட சிறுவர்களை அழைத்து வந்ததால், சிறுவர்களை ஊழியர் அனுமதிக்கவில்லை. ஆனால், இந்த விவகாரம் வேறு விதமாக புரிந்துகொள்ளப்படுவதால், பின்னர் அவர்கள் திரையரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். நாளை வெளியாகும் விடுதலை படத்திற்கு “ஏ” சான்றிதல் வழங்கப்பட்டுள்ளதால், அந்த படத்திற்கும் இதே நடைமுறை பின்பற்றப்படும் என்று விளக்கம் அளித்துள்ளனர்.
ரோகிணி தியேட்டர் ஊழியர்கள் இருவர் மீது வழக்குப்பதிவு
ரோகிணி தியேட்டரில் நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதி மறுத்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட, அலமாதியை சேர்ந்த செல்வம் என்பவரின் மனைவி காவேரி,20 கொடுத்த புகாரின் அடிப்படையில், ரோகிணி தியேட்டர் பணியாளர்களான கோயம்பேட்டை சேர்ந்த ராமலிங்கம்,50 மற்றும் வேலுாரைச் சேர்ந்த குமரேசன்,36 ஆகியோர் மீது இரு பிரிவுகளில் கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.