சென்னை: நிலத்தடி நீர்வளத்தை கட்டுப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும், நிர்வகிக்கவும், தமிழ்நாடு நீர்வள ஆணைய சட்டம், நீர்வளக் கொள்கை ஆகியவை தயாரிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தொிவித்துள்ளது.
இதுகுறித்து சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நீளவளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பு: தமிழகத்தில் நிலத்தடி நீர் வளங்களை கட்டுப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் மற்றும் நிர்வகிக்கவும் தமிழக அரசு கடந்த 2003 மார்ச் மாதம், தமிழ்நாடு நிலத்தடி நீர் (மேம்பாடு மற்றும் மேலாண்மை) சட்டத்தை இயற்றியது. நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக இச்சட்டம் 2013-ம் ஆண்டு நீக்கப்பட்டது.
பல்வேறு சட்ட ஆலோசனைகளின் முடிவுக்குப் பிறகு, தமிழகத்தின் நிலத்தடி மற்றும் மேற்பரப்பு நீர்வளத்தை ஒழுங்குபடுத்தவும், மேலாண்மை செய்யவும், நீரை மறு முறை பயன்படுத்தவும் ஓர் ஆணையம் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாநில திட்டக் குழுவின் மூலம் தமிழ்நாடு நீர்வள (ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை) ஆணைய சட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
மேலும், அனைவருக்கும் நீர் மற்றும் சுகாதாரம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தூய, தரமான நீர் என்பது 21-ம் நூற்றாண்டின் சவால்களில் ஒன்றாகும். தற்போதைய சூழல் மற்றும் அதன் சவால்களை புரிந்துகொள்வதும், மாநிலத்தின் குறிப்பிட்டதேவைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளவும் ஒரு கொள்கை தேவைப்படுகிறது. அந்த வகையில், மாநில திட்டக்குழு மற்றும் நீர்வளத்துறை இணைந்து நீரை பயன்படுத்துவோருடன் கலந்தாலோசித்து மாநில நீர்க் கொள்கையை உருவாக்கி வருகிறது.