சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்காக பதிவு செய்திருந்த மாணவ, மாணவிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் செய்முறை தேர்வில் பங்கேற்காதது தெரியவந்துள்ளது. இவர்களை கண்டறிந்து தேர்வில் பங்கேற்கச் செய்வதற்கான பணிகளை பள்ளிக்கல்வி துறை முடுக்கிவிட்டுள்ளது.
இதில் சுணக்கம் காட்டும் தலைமை ஆசிரியர்கள், அலுவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இத்தேர்வை சுமார் 16 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
தொடர்ந்து 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்.6-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடக்க உள்ளது. இத்தேர்வை எழுத 9.38 லட்சம் மாணவ, மாணவிகள் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே, பொதுத்தேர்வு எழுத உள்ள 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறை தேர்வு அந்தந்த பள்ளிகளில் மார்ச் 20 முதல் 28-ம் தேதி வரை நடத்தி முடிக்கவேண்டும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.
ஆனால், தற்போது செய்முறை தேர்வுக்கான அவகாசம் மார்ச் 31-ம் தேதி (நாளை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. செய்முறை தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்காக பதிவு செய்திருந்த மாணவ, மாணவிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்செய்முறை தேர்வில் பங்கேற்கவில்லை.
இவர்கள் இடைநின்ற மாணவர்களாக இருப்பதால், செய்முறை தேர்வுக்கான அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. செய்முறை தேர்வுக்கு வராத மாணவர்களை கண்டறிந்து, அவர்களை பொதுத்தேர்வில் பங்கேற்க வைப்பதற்கான துரித நடவடிக்கைகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் முன்னெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றனர்.
இதற்கிடையே பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் சுமார் 62 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்காமல் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இடைநின்ற மாணவர்கள்.
இந்த சூழலில் 10-ம் வகுப்பு செய்முறை தேர்விலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்காதது சர்ச்சையாகி உள்ளது. இதற்கிடையே, தமிழக பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காகமாதம்தோறும் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்துக்கான அலுவல் ஆய்வுக் கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று தொடங்கியது.
இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், செயலர் காகர்லா உஷா, ஆணையர் க.நந்தகுமார் உட்பட துறை சார்ந்த இயக்குநர்கள், முதன்மை மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
10-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுஉள்ளிட்ட பொதுத் தேர்வுகளில் பங்கேற்காத மாணவர்களை கண்டறிந்து, பொதுத்தேர்வு எழுதவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பணிகளுக்கு மாவட்ட ஆட்சியர், காவல் துறையின் உதவிகளை பெற்றுக்கொள்ளவும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இதில் சுணக்கம் காட்டும் தலைமை ஆசிரியர்கள், அலுவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.