புதுடெல்லி: மத்திய புலனாய்வு அமைப்பும், அமலாக்கத்துறையும் ஊழல்வாதிகளை ஒரே கட்சிக்குள் கொண்டு வந்துள்ளது என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். கெஜ்ரிவால் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர பாஜ முயற்சி செய்தது. ஆனால், அதற்கு போதிய ஆதரவு இல்லாததால் அந்த முடிவை பாஜ கைவிட்டது. இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் கெஜ்ரிவால், “ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முடியாததால், என் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாஜ வாபஸ் பெற்றுள்ளது. எந்த அழுத்தத்துக்கும் ஆம் ஆத்மி அடிபணியாது. பாஜவுக்கு அதிகார துஷ்பிரயோகம் செய்ய மட்டுமே தெரியும். நாட்டில் ஜனநாயகத்தை மிதிக்க அனைத்து அதிகாரங்களையும் பாஜ பயன்படுத்துகிறது. 2050ம் ஆண்டில் கூட பாஜ டெல்லியில் வெற்றி பெற முடியாது. பாஜ ஆட்சி முடிவுக்கு வந்தால்தான் நாட்டில் ஊழல் முடிவுக்கு வரும்” இவ்வாறு தெரிவித்தார்.