ஆவின் தயிர் பாக்கெட்டுகளில், `தஹி’ என இந்தியில் அச்சிட வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு, மத்திய உணவு மற்றும் தர கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI) உத்தரவிடப்பட்டிருப்பதாக நேற்று செய்தி வெளியானது.
இதற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், “தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். இந்தி திணிப்பை நிறுத்துங்கள். குழந்தையைக் கிள்ளிவிட்டு சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம். தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்” எனக் கண்டனம் தெரிவித்தார்.
இந்த நிலையில், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, தஹி என்ற வார்த்தையைப் பயன்படுத்தவேண்டும் என்ற அறிவிப்பைத் திரும்பப் பெறவேண்டும் என மத்திய உணவு மற்றும் தர கட்டுப்பாட்டு ஆணைய தலைவருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்.
அந்தக் கடிதத்தில், “அரசுக்குச் சொந்தமான கூட்டுறவு பால் சங்கங்கள், உள்ளூர் பிராந்திய மொழியை மட்டும் பயன்படுத்துவதுடன், `தஹி’-யை பயன்படுத்த வேண்டும் என FSSAI வெளியிட்ட அறிவிப்பு குறித்து `தி இந்து’ கட்டுரை வெளியிட்டிருக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எப்போதும் பிராந்திய மொழிகளை ஊக்குவித்து வருகிறது. முதன் முறையாக புதிய கல்விக் கொள்கையில் குழந்தைகளுக்குத் தாய்மொழியில் கல்வி வழங்க வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
நம் பிரதமர், தமிழ் மொழியின் சிறப்புகளைப் பல உலக மேடைகளில் புகழ்ந்திருக்கிறார். FSSAI-ன் அறிவிப்பு, பிராந்திய மொழியை ஊக்குவிக்கும் பிரதமரின் கொள்கையுடன் ஒத்துப்போகவில்லை. எனவே இந்த அறிவிப்பைத் திரும்பப்பெறுமாறும், அரசு நடத்தும் கூட்டுறவு பால் சங்கங்கள் அந்தந்த பிராந்திய மொழியைப் பயன்படுத்த அனுமதிக்குமாறும், தமிழ்நாடு பா.ஜ.க சார்பில் கேட்டுக்கொள்கிறோம்” எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார்.