மணிலா :பிலிப்பைன்சில் பயணியர் கப்பல் தீப்பற்றி எரிந்ததில், 31 பேர் பலியாகினர்; 23 பேர் படுகாயமடைந்தனர். மாயமான ஏழு பேரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் ஜாம்பாங்கோ நகரில் இருந்து, சுலு மாகாணத்தில் உள்ள ஜோலோ நகருக்கு எம்.வி., லேடி மேரி ஜாய் – 3 என்ற கப்பல் 250 பயணியருடன் நேற்று முன்தினம் புறப்பட்டது.
இந்தக் கப்பலில் நேற்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ ஜுவாலைகளின் அனல் தாங்க முடியாமல், பயணியர் பலர் கப்பலில் இருந்து கடலில் குதித்தனர்.
சிலர் துாக்கத்தில் இருந்த நிலையில், புகை மூட்டத்தில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
இந்த விபத்தில், 31 பலியாகினர்; 23 பேர் காயமடைந்தனர். எஞ்சியவர்களை பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு சொந்தமான கப்பலில் இருந்த வீரர்கள் மீட்டனர்.
கடலில் குதித்தவர்களில் மாயமான ஏழு பேரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.
கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து காரணம் தெரியாத நிலையில், இது குறித்து விசாரணை நடத்தப்படும் என பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்துள்ளது.