புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே மரத்தின் மீது அரசுப்பேருந்து மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20 பேர் காயமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையிலிருந்து அரசுப்பேருந்து 30 பயணிகளுடன் கீரனூர் நோக்கி சென்றுள்ளது. கீரனூர் அடுத்த ஒடுக்கம்பட்டி அருகே உள்ள மங்கதேவன்பட்டி என்ற இடத்தில் சென்றபோது சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் அதிவேகமாக மோதி விபத்திற்குள்ளானது.
பேருந்து புளியமரத்தில் அதிவேகமாக மோதியதில் மரம் வேரோடு சாய்ந்தது. பேருந்தில் பயணித்த 20 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து அப்பகுதியில் சென்ற பொதுமக்கள், பேருந்தில் பயணித்த பயணிகளை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் கீரனூர் அரசுமருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து கீரனூர் போலீசார் அப்பகுதியில் விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பேருந்து ஓட்டுநர் அதிவேகமாக வந்ததால் தான் விபத்து நிகழ்ந்தது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காயமடைந்த 20 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.