தூத்துக்குடி: புதுச்சேரியில் இருந்து சென்னை, கோவைக்கு விமான போக்குவரத்து தொடங்கப்படும் என்று கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார். நாகர்கோவிலில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தூத்துக்குடி விமான நிலையம் வந்த தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் நேற்று அளித்த பேட்டி: காரைக்கால் முதல் இலங்கை வரை கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட இருக்கிறது. அடுத்தகட்டமாக புதுச்சேரியில் இருந்து கோவை மற்றும் சென்னைக்கு 20 பேர் பயணம் செய்யக்கூடிய சிறிய ரக விமான போக்குவரத்து வர இருக்கிறது. புதுச்சேரியில் குடும்ப பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் அறிவித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. காஸ் சிலிண்டருக்கு மானியம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசும் காஸ் சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கும் என அறிவித்திருக்கிறது. புதுச்சேரியில் பெட்ரோல் – டீசல் விலை குறைக்கப்பட்டு உள்ளதால் தமிழகத்தில் உள்ள வாகனங்கள் கூட புதுச்சேரியில் வந்து பெட்ரோல் நிரப்பிச் செல்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.