புதுடில்லி :வரும் பத்தாண்டுகளில், இந்திய பொருளாதாரம் 6.5 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது என, தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
உலகம் நிச்சயமற்ற நிலையை எதிர்நோக்கி உள்ள நிலையில், உலகளாவிய ஏற்றுமதி வளர்ச்சி சற்று மந்தமாக இருக்கலாம்.
எனவே, நிதி, கடன்
மற்றும் முதலீட்டு சுழற்சியின் மறுசீரமைப்பு காரணமாக, வரவிருக்கும் பத்தாண்டுகளில், வணிகத் துறை மற்றும் ரியல் எஸ்டேட் துறை, சராசரியாக ஆறரை சதவீத வளர்ச்சியைக் காணும் என்று கருதுகிறேன்.
கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து தரவுகளைப் பார்த்தால், தொற்றுநோய்க்கு முந்தைய காலகட்டத்திலேயே, நாம் உன்னதமான நிதிச் சுழற்சி பழுதுபார்ப்பு, கடன் சுழற்சி பழுதுபார்ப்பு போன்ற ஒரு கால கட்டத்தை கடந்துள்ளோம். இது கட்டுமானத் துறை மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் மந்தநிலையைக் கொண்டு வந்தது. அப்படி சரிசெய்யப்பட்ட நிலையின் லாபத்தை இந்தியா அனுபவிக்கத் துவங்கும் நேரத்தில், தொற்றுநோய் வந்தது.
இதன் பின்னர் பொருட்களின் விலை அதிகரிப்பு எனும் அதிர்ச்சி வந்தது. அதன் பின்னர், கடந்த ஆண்டின் இரண்டாம் பாதியில், வட்டி விகித அதிர்ச்சி வந்தது.
இயற்கையாகவே, இந்த விஷயங்கள் சில தனியார் முதலீட்டாளர்களின் மனதில் நிச்சயமற்ற தன்மையைத் துாண்டுகின்றன. இதனால் அவர்கள் முன்பு இருந்ததை விட சற்று எச்சரிக்கையாக
இருந்தார்கள்.
இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கு அவர்களின் ஆற்றல் மாற்றத் தேவைகளுக்கு நிதியளிப்பதற்கு நிச்சயமாக பொருளாதார வளர்ச்சி தேவை.
உள்நாட்டு சேமிப்பு இல்லாமல், ஆற்றல் மாற்றத்திற்கு நிதியளிப்பதற்கான போதுமான வளங்கள் எங்கிருக்கும்?
காலநிலை நிதிக்கு தீர்வு காண, முதலில் பொருளாதார வளர்ச்சிக்கு தீர்வு காண வேண்டும். எப்படியாவது பொருளாதார வளர்ச்சியை இரண்டாவதாக தள்ளி, காலநிலை பிரச்னைகளை பிரதானப்படுத்துவது என்பது, உண்மையில் காலநிலை நிதி தீர்வுக்கு தீங்கு விளைவிக்கும் .
காலநிலை மாற்றம் அல்லது ஆற்றல் மாற்றத்திற்காக இவ்வளவு தனியார் துறை மூலதனத்தை ஈர்க்கப் போகிறோம் என்றால், நடப்புக் கணக்கு பற்றாக்குறை என்னவாகும் என்பதையும் பார்க்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.