கூடலூர்: கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு மங்குழி பகுதியில் கடந்த மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பழைய பலத்திற் பதிலாக புதிய பாலம் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டில் பெய்த கனமழையில் இந்த பாலத்தின் ஒரு பக்க தூண் சேதம் அடைந்ததால் பாலம் பலமிழந்து காணப்பட்டது. இதனால் இந்த பாலத்தில் கனராக வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டது. கடந்த வருடம் மழை காலத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் பாலம் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டது.
இதனால் மங்குழி உள்ளிட்ட சுற்றுவட்ட பகுதிகளில் வசித்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள் கூடலூர் நகருக்கு வருவதற்கு சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றிச் செல்ல வேண்டி இருந்தது. இதனை அடுத்து இப்பகுதியில் பொதுமக்கள் நடந்த செல்வதற்கு வசதியாக தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. உடைந்த பாலத்துக்கு பதிலாக புதிய பாலம் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. பாலத்திற்கான மூன்று தூண்கள் அமைக்க அடித்தளப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.