வாரணம் ஆயிரம், பொல்லாதவன், குத்து உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் கன்னட பட உலகின் முன்னணி நடிகை திவ்யா ஸ்பந்தனா. நடிகை மட்டுமல்லாது அரசியல்வாதியுமான திவ்யா ஸ்பந்தனா, 2012-ல் காங்கிரஸின் சேர்ந்தார். அதற்கு அடுத்த ஆண்டு கர்நாடகாவின் மாண்டியா தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கி எம்.பி-யானார்.
இந்த நிலையில், தன் தந்தை இறந்த பிறகு தன்னை தற்கொலை எண்ணத்திலிருந்து மீட்டவர் ராகுல் காந்திதான் என்று திவ்யா ஸ்பந்தனா கூறியிருக்கிறார்.
கன்னட தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தன்னுடைய தந்தை மறைவுக்குப் பிறகு, தான் சந்தித்த சூழ்நிலையைப் பற்றி பகிர்ந்துகொண்ட திவ்யா ஸ்பந்தனா, “என்னுடைய தந்தையை இழந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு, நான் நாடாளுமன்றத்தில் இருந்தேன். அங்கு யாரிடம் என்ன பேசுவது, நாடாளுமன்ற நடவடிக்கைகள் என்ன என்றுகூட எனக்குத் தெரியாது. ஆனால் எல்லாவற்றையும் நான் கற்றுக்கொண்டேன். என்னுடைய கவலைகளிலிருந்து விடுபட வேலையை நோக்கி நகர்ந்தேன். மாண்டியா மக்கள்தான் எனக்கு அந்த நம்பிக்கையை அளித்தனர்.
என் வாழ்வில் மிக முக்கியமான நபர் முதலில் என்னுடைய அம்மாதான். அதற்கடுத்து என்னுடைய தந்தை, மூன்றாவது ராகுல் காந்தி. என் தந்தையை இழந்தபோது, வாழ்வின் கீழ்நிலைக்குச் சென்றுவிட்டேன். என் வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைத்தேன், ஒதுங்கியிருந்தேன். அதையடுத்து 2014 தேர்தலில் நான் தோல்வியைத் தழுவினேன். மிகுந்த துயரம் நிறைந்த காலம் அது. அப்போது ராகுல் காந்திதான் எனக்கு உதவினார், உணர்வுரீதியாக மிகவும் ஆதரவாக இருந்தார்” என்று தெரிவித்தார்.
2014 லோக் சபா தேர்தலில் தோற்றபிறகு, 2017-ல் காங்கிரஸின் சமூக ஊடகப் பிரிவு தலைவராகப் பணியாற்றிய திவ்யா ஸ்பந்தனா, பின்னர் சிறிது காலத்திலேயே அந்தப் பதவியிலிருந்தும் விலகினார். மேலும், சமீபத்தில் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கப்போவதாக அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.