சேலம்: தமிழகத்தில் நடப்பாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, செய்முறை தேர்வு நடத்த நாளை (31ம்தேதி) வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்குகிறது. இவர்களுக்கான அறிவியல் பாட செய்முறை தேர்வுகளை, அந்தந்த பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நடத்திக் கொள்ள அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, கடந்த இரு வாரமாக அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் செய்முறை தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தது. இதனிடையே ஒருசில பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சிக்காக மெல்ல கற்கும் மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்தது.
இதன் காரணமாக மாணவர்கள் பலர் செய்முறை தேர்வுக்கு அனுமதிக்கப்படவில்லை. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா அனைத்து மாவட்ட சிஇஓக்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘‘தமிழகத்தில் நடப்பாண்டு பத்தாம் வகுப்பு ெபாதுத்தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் செய்முறை தேர்வுகள் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடத்திட தெரிவிக்கப்பட்டது. தற்போது மாணவர்களின் நலன்கருதி, பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்விற்கு வரும் 31ம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது. இதுவரை செய்முறை தேர்விற்கு வருகை புரியாத அனைத்து பள்ளி மாணவர்களும், கலந்து கொள்ள முதன்மை கல்வி அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும்,’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.