சென்னை: ஊரகப் பகுதிகளில் 10,000 புதிய சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு ரூ.15 கோடி சுழல் நிதி வழங்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மார்ச் 30) வறுமை ஓழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதன் விவரம்:
- ரூ.145 கோடியில் வேலை வாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி 45,000 கிராமப்புற இளைஞர்களுக்கு வழங்கப்படும்.
- ரூ.75 கோடியில் 5,000 சுய உதவிக் குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும்.
- ரூ.50 கோடியில் சுய உதவிக் குழுக்களால் நடத்தப்படும் 7,500 நுண் மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் வலுப்படுத்தப்படும்.
- மகளிர், புதிய தொழில் தொடங்குவதற்கும் ஏற்கனவே உள்ள தொழிலை மேம்படுத்தும் வகையில் ரூ.50 கோடியில் 1,000 ஊராட்சிகளில் நுண் தொழில் நிறுவனங்களுக்கான நிதித் திட்டம் செயல்படுத்தப்படும்.
- ஊரகப் பகுதிகளில் 10,000 புதிய சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு ரூ.15 கோடி சுழல் நிதி வழங்கப்படும்.
- ரூ.10 கோடி 1000 புதிய சமுதாய திறன் பள்ளிகள் உள்ளூர் வல்லுநர்கள் மூலம் ஊரக இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
- ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து சுய உதவிக் குழுக்களுக்கும் ரூ.9.48 கோடியில் புத்தாக்கப் பயிற்சி வழங்கப்படும்.
- ரூ.7.34 கோடியில் பொருளாதாரக் கூட்டமைப்புகள் மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்களின் மறுவாழ்விற்காக, உருவாக்கப்படும்.
- ரூ.5 கோடியில் 100 முக்கிய சுற்றுலாத் தலங்களில் மதி அங்காடிகள் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய, காட்சிப்படுத்த அமைக்கப்படும்.
- சிறப்பு சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய ரூ. 3 கோடியில் 100 ‘மதி எக்ஸ்பிரஸ்’ வாகனங்கள் வழங்கப்படும்.
- ரூ. 2.05 கோடியில் “வாங்குவோர்-விற்போர்” சந்திப்புகள்,சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்காக மாநில மற்றும் மாவட்ட அளவில் நடத்தப்படும்.
- ரூ.2 கோடியில் 100 சான்றளிக்கப்பட்ட சிறுதானிய உற்பத்தி அலகுகள் மகளிர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் அமைக்கப்படும்.
- சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு 37 மாவட்ட பெருந்திட்ட வளாகங்களில் ரூ.1.85 கோடியில் மகளிர் குழுக்களின் சிறுதானிய உணவகங்கள் அமைக்கப்படும்
- ரூ.1.36 கோடியில் “வானவில் மையம்” எனும் “பாலின வள மையம்” 37 மாவட்டங்களில் முன்மாதிரியாக அமைக்கப்படும்.
- ரூ.1 கோடியில் 100 இளைஞர் திறன் மற்றும் வேலை வாய்ப்பு திருவிழாக்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும்.
- ரூ.5 கோடியில் 50 பொது சேவை மையங்கள் சுய உதவிக் குழுக்களின் மதிப்பு கூட்டிய உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த “ஒரு வட்டாரம் ஓர் உற்பத்திப் பொருள்” (One Block One Product) எனும் திட்டத்தின் கீழ் அமைக்கப்படும்.