புதுடெல்லி: கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் மே 10-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் நேற்று அறிவித்தார்.
கர்நாடக சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் மே 24-ம் தேதி நிறைவடைகிறது. இந்நிலையில், டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளுக்கும் மே 10-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும். வாக்குகள் மே 13-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். வேட்புமனு தாக்கல் ஏப்.13-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெறும். மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்.21-ம் தேதி நடைபெறும். மனுவை திரும்ப பெற ஏப்.24-ம் தேதி கடைசி நாள்.
கர்நாடகாவில் 2.62 கோடி ஆண்கள், 2.59 கோடி பெண்கள், 42,756 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 5.21 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இத்தேர்தலில் 9.17 லட்சம் பேர் முதல்முறையாக வாக்களிக்கின்றனர். மாற்றுத் திறனாளிகள் 5.55 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 12.15 லட்சம். 100 வயதை கடந்த வாக்காளர்கள் 16,976 பேர் உள்ளனர். 58,282 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. நேரில் வர இயலாத மாற்றுத்திறனாளிகள், 80 வயதை கடந்தவர்கள், பழங்குடியினர் வீட்டில் இருந்தவாறே வாக்களிக்க பல ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணியை முடுக்கிவிட்டுள்ளன. காங்கிரஸ், மஜத, ஆம் ஆத்மி முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், பாஜக வேட்பாளர் தேர்வில் மும்முரமாக இறங்கியுள்ளது. இந்த தேர்தலில் பல கட்சிகள் போட்டியிட்டாலும் பாஜக – காங்கிரஸ் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது.
கடந்த 2018 தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் காங்கிரஸ் – மஜத கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. குமாரசாமி தலைமையிலான அரசு ஓராண்டை கடந்த நிலையில், 17 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவியதால் ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்ற நிலையில், முதுமை காரணமாக ஓராண்டுக்கு பின்னர் அவர் பதவியில் இருந்து விலக்கப்பட்டார்.
பிறகு, பசவராஜ் பொம்மை முதல்வராக பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது. வரும் 2024 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக நடைபெறுவதால், இத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வயநாடு இடைத்தேர்தல் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. இதனால், வயநாடு எம்.பி. பதவியை அவர் இழந்துள்ளார். அந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்று தலைமைதேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் செய்தியாளர்கள் நேற்று கேட்டனர். அதற்கு அவர், ‘‘இடைத்தேர்தல் அறிவிக்க 6 மாதம் வரை அவகாசம் உள்ளது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இடைத்தேர்தல் அறிவிக்க அவசரம் இல்லை’’ என்றார்.