சென்னை பெசன்ட் நகர் பகுதியில் கடந்த 1936 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் கலாஷேத்ரா கலைக் கல்லூரியில் எழுந்த பாலியல் புகார் சம்பவம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
இந்த கல்லூரியில் மூத்த ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டு வருவதாக கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புகார் எழுந்தது. தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அந்த மூத்த ஆசிரியர் மீது முன்னாள் மாணவர்களும் தொடர்ந்து புகார்களை கொடுத்தனர்.
இது குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட கல்லூரியின் இயக்குனர் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு, அப்படியான பாலியல் குற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டது.
இதனை அறிந்த கல்லூரி மாணவர்கள் இன்று காலை முதலே தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாலியல் குற்றச்சாற்று மற்றும் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து கலாஷேத்ரா அறக்கட்டளையின் ருக்மணி தேவி கலைக்கல்லூரி வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களில் விடுதிகளை காலி செய்ய வேண்டும் என்றும் மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
மேலும், கல்லூரி மூடப்படும் நாட்களில் தேர்வுகள் இருந்தால் அவை ஒத்திவைக்கப்படுவதாகவும் கல்லூரி நிர்வாகத்தின் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.