Doctor Vikatan: கடந்த சில வருடங்களாகவே எங்கே பார்த்தாலும் ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாத பாதிப்பு பற்றி அதிகம் கேள்விப்படுகிறோம். இதற்கான காரணம் என்ன…. கொலஸ்ட்ரால் அளவுக்கும் பக்கவாதத்துக்கும் தொடர்புண்டா? கொலஸ்ட்ரால் அதிகரித்தால் ஸ்ட்ரோக் வருமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம்
மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்போ, ரத்தக் கசிவோ ஏற்படுவதால்தான் பக்கவாதம் வருகிறது. ஓர் எளிய உதாரணம் மூலம் இதை விளக்குகிறேன். மூளை என்பதை உங்கள் வீட்டிலுள்ள மெயின் மின்சார போர்டு என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்த போர்டு இயங்கவில்லை என்றால், வீட்டில் விளக்குகள் எரியாது, மின்விசிறி சுழலாது. இன்னும் டி.வி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் என எந்த மின் சாதனமும் இயங்காது. வீடுகளில் 3 ஃபேஸ் மின் சப்ளை இருக்கும். மின்சாரம் தடைப்படும்போது மூன்றில் ஒரு ஃபேஸில் மட்டும் மின்சாரம் வரும். அதனால் குறிப்பிட்ட சில மின்சாதனங்கள் மட்டும் இயங்கும்.
மூளையின் செயல்பாடும் கிட்டத்தட்ட இதைப் போன்றதுதான். பேச்சு, கை, கால் அசைவு, பார்வை, கேட்பது, உணர்வது என எல்லா செயல்களும் மூளையின் மூலமே நடக்கின்றன. மூளையின் ரத்தக்குழாய்களில் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தடை ஏற்படும்போது, அதன் தாக்கத்திற்கேற்ப நம் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படும். உதாரணத்துக்கு பேச்சில் மட்டும் பிரச்னை வரலாம், பார்வையில் மட்டும் பாதிப்பு வரலாம். கை, கால்களில் லேசான மரத்துப்போன உணர்வு ஏற்படலாம். பலவீனமாக உணரலாம்.
அதுவே ரத்தக்குழாய்களில் பாதிப்பு தீவிரமாக இருக்கும்போது உடலின் ஒரு பக்கம் முழுவதுமோ, இரு பக்கங்களுமோ செயலற்றுப் போகலாம். மூளைக்கு ரத்தத்தைக் கொண்டுசெல்லும் குழாயில் ஏற்படும் பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து இப்படி மிகச் சாதாரணமானது முதல் மிக மோசமானது வரை பாதிப்பு எப்படியும் இருக்கலாம்.
சமீபகாலமாக இள வயதினரிடம் பக்கவாத பாதிப்பு அதிகரித்து வருவதைப் பார்க்கிறோம். பக்கவாதத்தை ஏற்படுத்தும் காரணிகள் கிட்டத்தட்ட மாரடைப்பை ஏற்படுத்தும் காரணிகளைப் போன்றவை தான். வயதாகும்போது பக்கவாத பாதிப்பு அதிகரிக்கிறது. பெண்களுக்கு மெனோபாஸ் காலகட்டத்தில் இந்த ரிஸ்க் அதிகரிக்கிறது. புகைப்பழக்கம், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, உடல்பருமன், உடல் இயக்கமற்ற வாழ்க்கைமுறை, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாக இருப்பது போன்ற எல்லாமே பக்கவாத ரிஸ்க்கை அதிகரிக்கும் காரணிகள். எனவே இவை தவிர்த்த ஆரோக்கிய வாழ்வியல் முறை பின்பற்றப்பட வேண்டும்.
கெட்ட கொலஸ்ட்ரால் மூளைக்கு எப்படி ஆபத்தானதோ, அதேபோல கொலஸ்ட்ரால் அளவு மிகக் குறைவாக இருப்பதும் மூளைக்கு ஆபத்தானதுதான். அது குறிப்பிட்ட அளவைவிட குறையும்போது மூளையில் ரத்தக்கசிவு ஏற்படலாம்.
ஜப்பானியர்களிடம் மூளையில் ஏற்படும் இந்த பாதிப்பு மிக அதிகம். காரணம், அவர்களது அதீத ஆல்கஹால் பழக்கமும், மிகக்குறைவான கொலஸ்ட்ரால் அளவும்தான். இந்த விஷயங்களாலும் ஒருவருக்கு பக்கவாத பாதிப்பு வரலாம். எனவே கொலஸ்ட்ரால் சரியான அளவில் தக்கவைத்துக்கொள்ளப்பட வேண்டியது மிக முக்கியம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.