நியூயார்க்: H1B விசா வைத்திருக்கும் வெளிநாட்டை சேர்ந்தவர்களின் கணவரோ, மனைவியோ அமெரிக்காவில் பணிபுரியலாம் என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டவருக்கு குறிப்பாக இந்தியர்களுக்கு பெரும் நிம்மதியையும், ஆறுதலையும் அளித்திருக்கிறது.
சில குறிப்பிட்ட H-1B விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத் துணைகளுக்கு வேலை வாய்ப்பை அங்கீகரிக்கும் ’ ஒபாமா கால விதிமுறைகளை’ தள்ளுபடி செய்யும்படி ’ Save Jobs USA’ என்ற அமைப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க மாவட்ட நீதிபதி தன்யா சுட்கான் வழக்கை தள்ளுபடி செய்தார்.
தீர்ப்பில் நீதிபதி தன்யா சுட்கன், ” H-4 விசா வைத்துள்ளோரும் ( H-4 விசா என்பது H1B விசா வைத்திருப்பவர்கள் மூலம் அமெரிக்காவுக்கு செல்லும் வாழ்க்கைத் துணைகளுக்கு அளிக்கப்படும் விசா) அமெரிக்காவில் தங்கி வேலைவாய்ப்பை பெறுவதற்கான அங்கீகாரத்தை அளிக்கும் அதிகாரத்தை அமெரிக்க அரசாங்கத்திற்கு நாடாளுமன்றம் வெளிப்படையாகவே அளித்துள்ளது” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.
இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள பு லம்பெயர்ந்தோர் உரிமைகளுக்கான வழக்கறிஞர் அஜய் கூறும்போது, “ இந்த தீர்ப்பு H1B விசா வைத்திருப்பவர்களுக்கு நிம்மதியை அளிக்கும். மேலும் இந்தத் தீர்ப்பு குடும்பங்கள் ஒன்றாக இருக்க உதவும்” என்றார்.
இந்த வழக்கு தொடரப்பட்டபோதே அமேசான், ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த வழக்கை எதிர்த்தன. H-1B விசா வைத்திருக்கும் பணியாளர்களின் வாழ்க்கைத் துணைகளில் இதுவரை 1,00,000 பேருக்கு அமெரிக்காவில் பணி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.