கர்நாடகாவில் மே 10ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளநிலையில், முன்னாள் முதல்வர் சித்தராமையா போட்டியிடும் தொகுதியில் எடியூரப்பாவின் மகனை களமிறக்க பாஜக பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எடியூரப்பா செய்தியாளர் சந்திப்பு
கர்நாடகாவில் பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து வரும் முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பா, காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையாவை எதிர்த்து தனது மகன் போட்டியிடலாம் என்று இன்று சூசகமாக தெரிவித்துள்ளார். தற்போது அவரது மகன் யதீந்திரா பிரதிநிவப்படுத்தும் மைசூருவில் உள்ள வருணா தொகுதியில் சித்தராமையாவும் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
வருணா தொகுதியில் தனது மகன் பி.ஒய்.விஜயேந்திரா களமிறக்கப்படுவாரா என்பதை முடிவு செய்ய உயர்மட்ட விவாதங்கள் நடந்து வருகின்றன என்று எடியூரப்பா கூறினார். கர்நாடகாவில் மே 10ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் அவசரச் செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இடஒதுக்கீடு நியாமானது
“லிங்காயத்துகள் மற்றும் பிற சமூகங்களுக்கான இடஒதுக்கீடு நியாயமானது. முஸ்லிம்களுக்கும் எந்த அநீதியும் இழைக்கப்படவில்லை. இப்போது பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரின் கீழ் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கும்” என்று எடியூரப்பா கூறினார். 224 இடங்களைக் கொண்ட சட்டசபையில் காங்கிரஸ் 70 இடங்களுக்கு மேல் தாண்டாது என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என்று வெளியான தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளை நிராகரித்த அவர், “நான் 50 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். மக்களின் நாடித் துடிப்பை நான் நன்கு அறிவேன். அடிமட்டத்தில் இருந்து கட்சியைக் கட்டியெழுப்பியுள்ளோம். பாஜகவின் சொந்த கருத்துக் கணிப்புகள் பாஜகவிற்கு 130 முதல் 140 இடங்கள் வரை கிடைப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக தேர்தல் 2023: பாஜக தான் டாப்… ஆனா ஒரு பெரிய சிக்கல்- வெளியான சர்வே முடிவுகள்!
கர்நாடகா வரலாற்றில், அல்லது அனேகமாக இந்தியாவிலேயே முதன்முறையாக, இடஒதுக்கீட்டில் நமது முதல்வர் மிகப் பெரிய பணியைச் செய்து சமூகப் பாதுகாப்பை வழங்கியுள்ளார். லிங்காயத்துகளுக்கு இப்போது ஏழு சதவீத இடஒதுக்கீடும், வொக்கலிகாக்களுக்கு 6 சதவீதமும், பட்டியல் சாதியினருக்கு (இடது) 6 சதவீதமும், பட்டியல் சாதியினர் (வலது) 5.5 சதவீதமும், போவி, பஞ்சாரா இதர சமூகத்தினர் 4.5 சதவீதமும், இதர பட்டியலினத்தவர்களுக்கு ஒரு சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது
மோடி தான் அடுத்த பிரதமர்
2024 நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில், நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும். காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடம் அவர்களின் தலைவர் யார் என்று கேட்க விரும்புகிறேன், நரேந்திர மோடிக்கு இணையாக ராகுல் காந்தி இருக்க முடியுமா?. சர்வதேச அளவில் பிரதமர் மோடிக்கு மரியாதை இருக்கிறது, இது பாஜகவுக்கு சாதகமாக அமையும்’’ என்றும் எடியூரப்பா கூறினார்.