சென்னை: Ponniyin Selvan 2 Audio Launch (பொன்னியின் செல்வன் 2 ஆடியோ வெளியீட்டு விழா): பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிப்பதற்கு தான் நடுங்கியதாக நடிகை த்ரிஷா தெரிவித்திருக்கிறார்.
எழுத்தாளர் அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் காலங்கடந்து கொண்டாடப்பட்டுவருகிறது. உண்மை சம்பவங்களையும், கற்பனையையும் கலந்து 60 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலை இன்றைய தலைமுறையினரும் அதனை விரும்பி படித்துவருகின்றனர்.
மணிரத்னம் உருவாக்கிய பொன்னியின் செல்வன் 1
வருடா வருடம் நடைபெறும் புத்தக கண்காட்சியில் பொன்னியின் செல்வன் புத்தகத்தை தவறாமல் வாங்குபவர்கள் உண்டு. இருப்பினும் ஒருதரப்பினர் அதை வாசிக்காமல் இருந்தனர். அவர்களையும் வாசிக்கத்தூண்டியது பொன்னியின் செல்வன் திரைப்படம். மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கிறது பொன்னியின் செல்வன்.
500 கோடி ரூபாயை வசூலித்த பொன்னியின் செல்வன் 1
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய்வரை வசூலித்தது. படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஜெயராம், பிரபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
எதிர்பார்ப்பை எகிற வைத்த பொன்னியின் செல்வன் 2
முதல் பாகம் பெற்ற வெற்றியை அடுத்து படத்தின் இரண்டாம் பாகமும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது. அதுமட்டுமின்றி ஏற்கனவே நாவல் வாசித்தவர்களுக்கு முதல் பாகத்தின் மீது இருந்த சிறு சிறு குறைகளையும் இரண்டாம் பாகம் நிவர்த்தி செய்யும் என நம்பப்படுகிறது. படமானது ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதன் ட்ரெய்லர் நேற்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
நேற்று வெளியான ட்ரெய்லர்
அதன்படி சென்னை நேரு உள்விளையாட்டரங்கத்தில் நேற்று நடந்த பிரமாண்ட விழாவில் கமல் ஹாசன், சிம்பு உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். கமல் பொன்னியின் செவன் 2 படத்தின் ட்ரெய்லரையும் வெளியிட்டனர். ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் பெரும் வெற்றி பெறும் என கூறிவருகின்றனர். அதேசமயம், ட்ரெய்லர் பெரிதாக ஈர்க்கவில்லை என மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்.
த்ரிஷா பேச்சு
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த படம் சில தசாப்தங்களாக எடுக்கப்படாமல் இருந்த படம் என்பதால், இப்படத்தில் ஆரம்பத்தில் நடிக்க நடுங்கினேன், இப்போது நாங்கள் செய்த பாத்திரங்கள் பற்றி நன்றாக தெரியும். ஆனால் அதுகுறித்து இப்போது எதுவும் சொல்லகூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். அதே சமயம், ஆக்ஷனோ, டிராமாவோ எல்லாமே இப்படத்தில் இன்னும் டபுள் டபுளாக இருக்கும். லுக் அருமையாக இருக்கும். படம் நன்றாக வந்துள்ளது” என்றார்.