சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகிறது.
இதனை முன்னிட்டு பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இதில் இயக்குநர் பாரதிராஜா, நடிகர்கள் கமல், சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாரதிராஜா பேசியது வைரலாகி வருகிறது.
PS 2 ட்ரெய்லர்
மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பரில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் எப்ரல் 28ம் தேதி இரண்டாம் பாகம் வெளியாகிறது. இதனை முன்னிட்டு பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
பாரதிராஜா கலகலப்பு
இந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் மூத்த இயக்குநர் பாரதிராஜா, நடிகர்கள் கமல்ஹாசன், சிம்பு, நடிகைகள் குஷ்பூ, ரேவதி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அப்போது இயக்குநர் பாரதிராஜா பேசியது ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலகலப்பை ஏற்படுத்தியது. பொன்னியின் செல்வன் படத்தை மறைந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆரும் திரையில் கொண்டு வர வேண்டும் என கனவோடு இருந்தார். அவர் தயாரிப்பில் கமலையும் ஸ்ரீதேவியையும் நடிக்க வைத்து தான் இயக்க வேண்டும் என எம்ஜிஆர் தன்னிடம் கூறியிருந்தார்.
கமல் – ஸ்ரீதேவி ஜோடி
நானும் 9ம் வகுப்பு படிக்கும்போதே பொன்னியின் செல்வன் நாவலை படித்து முடித்துவிட்டேன். அதனால் எனக்கும் இதனை படமாக இயக்க ஆசை தான். முக்கியமாக கமலை வந்தியத்தேவனாகவும் ஸ்ரீதேவியை குந்தவையாகவும் நடிக்க வைக்க வேண்டும் என எம்ஜிஆர் நினைத்தார். ஆனால் அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அது நடக்காமல் போனது. நல்லவேளை நான் இயக்கவில்லை, எடுத்திருந்தால் சொதப்பியிருப்பேன் என்றார்.
லட்டு லட்டாக ஹீரோயின்
அதனால் தான் பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் இயக்கும்படி கடவுள் பார்த்துக்கொண்டார் போல. இப்படத்திற்கு லட்டு லட்டாக நாயகிகளை தேர்ந்தெடுத்துள்ளார் மணிரத்னம். நந்தினி, குந்தவை, பூங்குழலி என எல்லோரையும் காதலிக்க வேண்டும் போல உள்ளது. பொன்னியின் செல்வன் கேரக்டர்களுக்கு மணிரத்னம் எவ்வளவு அழகாக உயிர் கொடுத்துள்ளார். இதையெல்லாம் பார்க்க கல்கி உயிரோடு இல்லாமல் போய்விட்டாரே என வேதனையோடு தனது பேச்சை முடித்தார் பாரதிராஜா. அவரின் இந்தப் பேச்சு ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.