சென்னை: நரிக்குறவ இன மக்கள் காசு கொடுத்து டிக்கெட் வாங்கிய போதும் அவர்களை அனுமதிக்காமல் அவமானப்படுத்தி வெளியே அனுப்பிய ரோகிணி தியேட்டர் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்காமல் யுஏ சான்றிதழ் படம் என்பதால் குழந்தைகளுடன் வந்தவர்களை உள்ளே விடவில்லை என சப்பைக் கட்டுக் கட்டிய ரோகிணி தியேட்டர் உரிமையாளர்களை கண்டித்து #BoycottRohiniCinemas ஹாஷ்டேக்கை நெட்டிசன்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
இதே போலத்தான் எங்களை எப்போதும் நடத்துகின்றனர் என்றும் டிக்கெட் வாங்க அனுமதிக்கும் தியேட்டர் படம் பார்க்க மட்டும் அனுமதி மறுப்பது ஏன் என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
பத்து தல படத்துக்கு மட்டுமின்றி முன்னதாக விஜய் நடித்த வாரிசு படத்தையும் பார்க்க விடாமல் விரட்டி அடித்ததாக பாதிக்கப்பட்ட பெண் பேசி உள்ளார்.
ஒழியாத தீண்டாமை
94வது ஆஸ்கர் விழா மேடையில் சிறந்த நடிகர் விருது வாங்கிய வில் ஸ்மித் அதற்காக டிரெண்டாக வேண்டிய நிலையில், கிறிஸ் ராக்கை அடித்து உலகம் முழுவதும் ட்ரோல் செய்யப்பட்டார். பத்து தல படம் இன்று வெளியான நிலையில், அந்த படத்தை பார்க்க அனுமதிக்கப்படாமல் தீண்டாமை கொடுமை நிகழ்த்தப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் தீயாக பற்றி எரிகிறது.
விமர்சிக்கப்படும் விளக்கம்
சிறுவர்களை அழைத்து வந்த நிலையில் தான் யுஏ சான்றிதழ் படத்துக்கு அனுமதிக்கவில்லை என ரோகிணி திரையரங்கம் மன்னிப்பு கேட்காமல் சப்பைக் கட்டு கட்டும் விளக்கத்தை கொடுத்திருப்பதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டி #BoycottRohiniCinemas ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். பல முறை யுஏ சான்றிதழ் படங்களுக்கு சிறுவர்கள் சென்று வரும் நிலையில், தாங்கள் செய்த தவறை மறைக்க இப்படியொரு விளக்கம் கொடுத்து மேலும், விமர்சினத்துக்குள்ளாகி உள்ளனர்.
பாய்காட் ரோகிணி
எல்லா மனிதர்களையும் சமமா மதிக்கணும்.. இப்படி அவங்க டிரெஸ் மற்றும் தோற்றத்தை வைத்து ஒதுக்கக் கூடாது என நெட்டிசன்கள் ரோகிணி தியேட்டரில் பத்து தல படம் திரையிடப்பட்ட போது நடந்த சம்பவத்தை வைத்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ரோகிணி தியேட்டருக்கு இனி படம் பார்க்க போக மாட்டோம் என நெட்டிசன்கள் ட்வீட் போட்டு வருகின்றனர்.
தப்பு பண்றவங்களுக்கு
தப்பு பண்ணுறவுங்களுக்கு பதவி பணம் ஜாதினு நெறைய இருக்கு சார்.. பாதிக்கப்பட்டவர்களுக்கு.. நாம்ம தான இருக்கோம் !! #BoycottRohiniCinemas என சூர்யா ரசிகர்கள் ஜெய்பீம் படத்தின் வசனங்களை பதிவிட்டு வெளுத்து வாங்கி வருகின்றனர்.
திருந்தவே மாட்டீங்களாடா
நரிக்குறவ இனத்தை சேர்ந்த பெண் தனது குழந்தைகளுடன் பத்து தல படம் பார்க்க ரோகிணி தியேட்டருக்கு வந்த போது அந்த பெண்ணை அனுமதிக்க மறுத்த ஊழியரின் வீடியோவை பதிவிட்டு “திருந்தவே மாட்டீங்களாடா” என நெட்டிசன்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.