சென்னை : நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 படத்தின் ஆடியோ வெளியீடு நேற்றைய தினம் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் ட்ரெயிலர் மற்றும் இசை வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. முன்னதாக வெளியான அகநக பாடலும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
நேற்றைய தினம் நடந்துள்ள இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் படத்தின் நடிகர்கள், நடிகைகள் அனைவரும் கலந்துக் கொண்டு படம் குறித்த பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டனர்.
பொன்னியின் செல்வன் 2 படம்
நடிகர்கள் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜ், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஜெயராம் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியானது பொன்னியின் செல்வன் படம். இந்தப் படம் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு வெளியான நிலையில், ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் மிரட்டியது.
ஏப்ரல் 28ல் வெளியாகும் பொன்னியின் செல்வன் 2 படம்
இந்தப் படம் இயக்குநர் மணிரத்னத்தில் கனவு ப்ராஜெக்டாக வெளியான நிலையில், மிகவும் அழகுடன் ஒவ்வொரு கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு படம் வெளியானது. லைகாவுடன் இணைந்து மணிரத்னமும் இந்தப் படத்தை தயாரித்திருந்த நிலையில், அவருக்கு இந்தப் படம் சிறப்பாக கைக்கொடுத்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த மாதம் 28ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
களைகட்டியுள்ள பிரமோஷன்கள்
படத்தின் முதல் பாகமும் பான் இந்தியா படமாக வெளியான நிலையில், தற்போது இரண்டாவது பாகமும் அவ்வாறே ரிலீசாகவுள்ளது. படத்தின் ரிலீசுக்கு ஏறக்குறைய ஒரு மாத காலம் உள்ள நிலையில், கடந்த சில தினங்களாகவே இந்தப் படத்தின் பிரமோஷன்கள் களைகட்டி வருகிறது. படத்தில் பர்ஸ்ட் சிங்கிள், நடிகர்களின் ட்ரான்ஸ்பர்மேஷன் வீடியோக்கள் என அடுத்தடுத்த அப்டேட்களை, வீடியோக்களை படக்குழுவினர் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.
இசை மற்றும் ட்ரெயிலர் ரிலீஸ்
இதனிடையே நேற்றைய தினம் நடைபெற்ற இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுள்ளது. இதில் படத்தின் அனைத்து நடிகர், நடிகைகளும் கலந்துக் கொண்டு, படம் குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர்கள் பிரம்மாண்டமான சிம்மாசனத்தில் அமர்ந்து தங்களை அந்தந்த கேரக்டர்களாகவே உணர்ந்த தருணம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
சந்தேகப்பட்ட மணிரத்னம்
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்த நிலையில், நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சரத்குமார், மணிரத்னம் தன்னை சந்தேகப்பட்ட தருணத்தையும் பகிர்ந்துக் கொண்டார். படத்தில் பெரிய பழுவேட்டையராக அவர் நடித்துள்ள நிலையில், நிகழ்ச்சியில் பேசிய அவர், தனக்கு கொடுத்த முதல் காட்சியே ஐஸ்வர்யா ராயுடனான காதல்காட்சி தான் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்தக் காட்சியின்போது தன்னைப் பார்த்து ரொமான்ஸ் வரவில்லையா என்று மணிரத்னம் கேட்டது தனக்கு வருத்தத்தை கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
வருத்தப்பட்ட சரத்குமார்
இரண்டு முறை காதலித்து திருமணம் செய்த தன்னை பார்த்து இவ்வாறு மணிரத்னம் சந்தேகப்பட்டது தன்னை சங்கடப்பட வைத்ததாகவும் இதையடுத்து அந்தக் காட்சியில் கூடுதல் கவனம் செலுத்தி தான் நடித்துக் கொடுத்ததாகவும் சரத்குமார் மேலும் கூறியுள்ளார். படத்தில் தன்னுடைய சூழ்ச்சிக்காக பெரிய பழுவேட்டரையரை திருமணம் செய்யும் நந்தினி, தொடர்ந்து அவரை வைத்து காய் நகர்த்துவதாக படத்தின் காட்சிகள் முதல் பாகத்தில் காணப்பட்ட நிலையில், இரண்டாவது பாகத்தில் அதன் தொடர்ச்சியாக நடக்கும் செயல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.