திருவனந்தபுரம்: Siruthai Siva Brother Bala (சிறுத்தை சிவா தம்பி பாலா): இன்னும் மூன்று நாள்களில் அறுவை சிகிச்சை நடைபெறவிருக்கும் சூழலில் தான் பிழைக்கலாம் இல்லை இறந்துபோகலாம் என சிறுத்தை சிவா தம்பி பாலா பேசியிருக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் சிறுத்தை படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சிவா. அதனைத் தொடர்ந்து அவர் அஜித்துடன் வீரம், விஸ்வாசம், வேதாளம், விவேகம் என தொடர்ச்சியாக பணியாற்றினார். இதில் விவேகம் தவிர்த்து மற்ற படங்கள் ஹிட்டடித்தன. தற்போது அவர் சூர்யாவை வைத்து படம் இயக்கிவருகிறார். இந்தப் படமானது மொத்தம் பத்து மொழிகளில் வெளியாகிறது. மேலும் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது.
சிறுத்தை சிவா தம்பி பாலா
சிறுத்தை சிவாவுக்கு பாலா என்ற தம்பி இருக்கிறார். பாலாவும் சினிமாவில் இருக்கிறார். அவர் அன்பு, காதல் கிசு கிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இருப்பினும் அஜித்துடன் அவர் நடித்த வீரம் படம் அவருக்கு அடையாளத்தை கொடுத்தது. அப்படத்தில் அவர் அஜித்துக்கு தம்பியாக நடித்திருந்தார். இவர் 2016ஆம் ஆண்டு அம்ருதா என்ற பாடகியை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அது விவாகரத்தில் முடிந்தது.
மருத்துவரை மணந்துகொண்ட பாலா
முதல் திருமணம் முறிந்த பிறகு சில வருடங்களாக தனியாக இருந்த பாலா கடந்த 2021ஆம் ஆண்டு மருத்துவர் எலிசபெத் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குள்ளும் பிரச்னை ஏற்பட்டுவிட்டதாக மலையாள ஊடகங்கள் அவ்வப்போது எழுதிவந்தன. ஆனால் அதுகுறித்து இரு தரப்பும் எதுவும் கூறாமல் மௌனம் காத்து வந்தது.
உடல்நிலை பாதிக்கப்பட்ட பாலா
சூழல் இப்படி இருக்க பாலாவுக்கு கல்லீரல் தொடர்பான பிரச்னை ஏற்பட்டு உடல்நலம் பாதிப்பு உருவானது. கடந்த 6ஆம் தேதி கடுமையான இருமல் மற்றும் வயிற்று வலி காரணமாக கொச்சியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார்.
பாலாவுக்கு அறுவை சிகிச்சை
இன்னும் ஓரிரு நாள்களில் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெறவிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் அவரது இரண்டாவது வருட திருமண நாளை முன்னிட்டு மருத்துவமனையில் வைத்து தன் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். மேலும் தனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றியும் தெரிவித்திருக்கிறார்.
மனைவிக்கு உருக்கமான கோரிக்கை
இதுதொடர்பாக அவர் பேசிய வீடியோவில், “எல்லோருக்கும் வணக்கம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஏறத்தாழ ஒரு மாதம் ஆகியிருக்கிறது. எல்லோருடைய பிரார்த்தனைக்கும் நன்றி. ஒரு மேஜர் அறுவை சிகிச்சை எனக்கு நடக்கவிருக்கிறது. அதில் நான் சாவதற்கும் வாய்ப்பு உண்டு. பிழைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. எல்லாம் பிரார்த்தனைபடிதான் நடக்கும்” என்றார். தற்போது இந்த வீடியோ ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அவருக்கு அறுவை சிகிச்சை முடிந்து உயிருடன் திரும்ப வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.