சென்னை: திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை இந்த வாரம் அதிகமாகவே உள்ளது.
இதனால் இந்த வார இறுதியை கொண்டாட ஓடிடி ரசிகர்கள் ரெடியாகிவிட்டனர்.
திரையரங்குகளில் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்ற அயோத்தி, ஹாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய படங்கள் இந்த வாரம் வெளியாகின்றன.
அதன்படி, தமிழ், ஆங்கிலம் உட்பட மற்ற மொழிகளிலும் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.
சசிகுமாரின் அயோத்தி
சசிகுமார், போஸ் வெங்கட், குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் நடிப்பில் மார்ச் 3ம் தேதி வெளியான திரைப்படம் அயோத்தி. உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து மந்திர மூர்த்தி இயக்கிய இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மத நல்லிணக்கம், மனிதம் என சமகால மத அடிப்படைவாத அரசியல் நெருக்கடிகளுக்கு மருந்தாக அமைந்தது அயோத்தி. இப்படத்தின் கதையை யார் எழுதியது என்பது சர்ச்சையானாலும், அதனையும் கடந்து வெற்றிப் பெற்றது. சசிகுமாருக்கு கம்பேக் கொடுத்த அயோத்தி இந்த வாரம் ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது.
ஜெயம் ரவியின் அகிலன்
ஜெயம் ரவி நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அகிலன் திரைப்படம் கடந்த 10ம் தேதி வெளியானது. கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவியுடன் ப்ரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம், ஹார்பர் பின்னணியில் கேங்ஸ்டர் படமாக உருவானது. ஆனால், கதை, திரைக்கதை சொதப்பலால் நெகட்டிவான விமர்சனங்களைப் பெற்ற அகிலன், முதல் வாரத்தோடு தியேட்டரில் இருந்து வெளியேறியது. இந்நிலையில், 20 நாட்களில் இந்தப் படம் ஜீ 5 ஓடிடியில் வெளியாகிறது.
அரியவன், பஹீரா
மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் அரியவன். திருச்சிற்றம்பலம் வெற்றியால் கிடைத்த பெயரை தக்கவைத்து கொள்வதற்காக இந்தப் படத்தை தான் இயக்கவில்லை என பேட்டிக் கொடுத்தார் மித்ரன் R ஜவஹர். ஆனால், படக்குழு அதனை மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அரியவன் திரைப்படம் டென்ட்கொட்டா ஓடிடியில் இந்த வாரம் வெளியாகிற்து. அதேபோல், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த பஹீரா திரைப்படமும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்தப் படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
இந்தியில் வெளியாகும் படங்கள்
இந்த வரிசையில், ஷெஹ்சாதா என்ற இந்திப் படமும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. கார்த்திக் ஆர்யன், அல்லு அரவிந்த் நடித்த இந்தப் படத்தை ரோஹித் தவான் இயக்கியிருந்தார். பிப்ரவரி 17ம் தேதி தியேட்டரில் வெளியான ஷெஹ்சாதா திரைப்படம் இந்த வாரம் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. அதேபோல், சாரா அலிகான் நடித்துள்ள கேஸ் லைட் திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் இந்த வாரம் வெளியாகிறது.
அமேசான் ப்ரைமில் அவதார் 2
இந்த வாரம் ஓடிடி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது அவதார் 2 திரைப்படம். கடந்தாண்டு டிசம்பர் 16ம் தேதி தியேட்டரில் வெளியான அவதார் : தி வே ஆஃப் வாட்டர் படத்தை ஜேம்ஸ் கேமரூன் இயக்கியிருந்தார். பாக்ஸ் ஆபிஸில் பல ஆயிரம் கோடிகளை வசூலித்த அவதார் 2 தற்போது அமேசானில் வெளியாகிறது. ஆனால், அமேசானின் PPV வியூவர்ஸ் மட்டுமே இந்தப் படத்தை பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மர்டர் மிஸ்டரி 2, அன்சீன் ஆகிய ஆங்கில படங்கள் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.