சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீது இறுதி விசாரணை நடத்துவதா அல்லது இடைக்கால நிவாரணம் வழங்குவதா என்பது குறித்து ஏப்.3-ம் தேதி முடிவு செய்யப்படும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை தனி நீதிபதி கே.குமரேஷ்பாபு நிராகரித்து 28-ம் தேதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களான பி.எச்.மனோஜ்பாண்டியன், ஆர்.வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். அதில், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யும் வரை, அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி பதவி வகிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் பி.எஸ்.ராமன், மணிசங்கர், அப்துல் சலீம், ஸ்ரீராம் ஆகியோர் ஆஜராகி, “எங்களது குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக தெரிவித்துள்ள தனி நீதிபதி, இடைக்கால நிவாரணம் அளிக்க தவறிவிட்டார். எனவே, இந்த வழக்கில் எங்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். எங்களை கட்சியில் இருந்து நீக்கிய நடைமுறை தவறு என்றால் அதன்பிறகு நடந்த மற்ற நடைமுறைகள் எப்படி சரியாகும்? தனி நீதிபதி இடைக்கால நிவாரணம் வழங்கியிருந்தால் ஓபிஎஸ்ஸும் பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட்டிருக்க முடியும். எனவே இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை அதிமுகவின் பொதுச் செயலாளராக பழனிசாமி தொடர தடை விதிக்க வேண்டும். அதுபோல தனி நீதிபதியின் உத்தரவுக்கும் தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டனர்.
இபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், “ஏற்கெனவே அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு உச்ச நீதிமன்றமே ஒப்புதல் வழங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து தனி நீதிபதியின் உத்தரவுக்குப் பிறகே பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்பட்டு, அதிமுகவின் பொதுச் செயலாளராக பழனிசாமி முறைப்படி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மிகப்பெரிய கட்சி என்ற முறையில் கட்சியையும், தொண்டர்களையும் தயார்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அதைக் கருத்தில் கொண்டே பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையிலும் ஓபிஎஸ்ஸின் இருக்கையை மாற்றக் கோரி சட்டப்பேரவைத் தலைவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் ஒரு வேட்பாளர் மனுத்தாக்கல் செய்ய குறைந்தபட்சம் 10 மாவட்டச் செயலாளர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், ஓபிஎஸ் எப்படி போட்டியிட முடியும். எனவே இந்த வழக்கில் இடைக்கால நிவாரணம் எதுவும் அளிக்க வேண்டியது இல்லை என்பதால் இறுதி விசாரணைக்கே பட்டியலிடலாம்” என்றார்.
அப்போது ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் குறுக்கிட்டு, “ஓபிஎஸ்ஸுக்கு மாவட்டச் செயலாளர்களின் ஆதரவு இல்லை என எப்படி கூற முடியும்? மேலும் இபிஎஸ்ஸுக்காக கட்சியின் அனைத்து விதிகளும் மாற்றப்பட்டுள்ளன. இபிஎஸ் பொதுச் செயலாளராக நீடித்தால், எங்களது நிலை என்ன?” என்றார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் இருதரப்பும் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கில் இறுதி விசாரணை நடத்துவதா அல்லது இடைக்கால நிவாரணம் வழங்குவதா என்பது குறித்து ஏப்.3-ம் தேதி முடிவு செய்யப்படும் என கூறி விசாரணையை தள்ளிவைத்தனர்.