பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் கலைஞர் அரங்கம் கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. மீஞ்சூர் அடுத்த, அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில் சுமார் 5000க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதில் ஏராளமான ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத்தினர் இங்கு வசிப்பதால் இவர்களுக்கென்று விசேஷ நிகழ்ச்சிகளுக்காக சமுதாயக்கூடம் வேண்டி ஜுவாரி சிமெண்ட் கம்பெனியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன்படி, இந்த நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் கட்டப்பட்ட கலைஞர் அரங்கம், சமுதாய கூட கலையரங்கம், அதற்கான சமையலறை ஆகியவற்றை பொது மேலாளர் நாகேந்திர பிரசாத் ரிப்பன் வெட்டி நேற்று திறந்து வைத்தார். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக அத்திப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் சுகந்தி வடிவேல், துணைத் தலைவர் எம்.டி.ஜி.கதிர்வேல் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில், அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சிக்கு உட்பட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.