இஸ்லாமாபாத்: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இம்ரான் கான் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்குப் பின்னர் மீண்டு வந்துள்ள இம்ரான் கான் ‘தி இண்டிபெண்டன்ட்’ பத்திரிகைக்கு ஒரு பேட்டியளித்துள்ளார். அதில் தன் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல் உடலில் நீண்ட கால பாதிப்புகளை தந்துள்ளன என்று கூறியுள்ளார்.
முன்னதாக, 2022 அக்டோபர் இறுதியில் பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வலியுறுத்தி அந்நாட்டின் முன்னாள் பிரதமரும் பிடிஐ கட்சியின் தலைவருமான இம்ரான் கான் பேரணியைத் தொடங்கினர். நவம்பர் 3-ஆம் தேதி அவரது பேரணி வியாழக்கிழமை பஞ்சாப் மாகாணத்தின் வஜிராபாத் வந்தது. அவரது கட்சியின் முன்னணி தலைவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்றனர். இம்ரான் கான் தனது பிரச்சார வாகனத்தின் உச்சியில் இருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், அவரது இரண்டு கால்களிலும் 3 குண்டுகள் பாய்ந்தன. இதில் படுகாயங்களுடன் இம்ரான் கான் மீட்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின் மீண்டு வந்துள்ள இம்ரான் கான் கடந்த சனிக்கிழமை லாகூரில் ஒரு பேரணியில் கலந்து கொண்டார். 5 மாதங்களுக்குப் பின்னர் அவர் கலந்து கொண்ட முதல் பேரணி.
இந்நிலையில், ‘தி இண்டிபெண்டன்ட்’ பத்திரிகைக்கு அவர் ஒரு பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர், “என் காலில் புல்லட் ஏற்படுத்திய காயங்கள் ஆறிவிட்டன. ஆனால் அதனால் ஏற்பட்ட நரம்பு சிதைவு நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. என்னால் இன்னமும் நன்றாக நடக்க முடியவில்லை. எனது வலது காலில் முழுமையாக உணர்ச்சி திரும்பவில்லை. இவையெல்லாம் காலப்போக்கில் சரியாகலாம், மாறலாம் என்று மருத்துவர்கள் சொல்லியுள்ளனர். இருப்பினும் நான் இப்போதே தேர்தலுக்கு எனது கட்சியை ஆயத்தப் படுத்துகிறேன். ஏப்ரல் 30-ல் நடைபெறுவதாக இருந்த பஞ்சாப் தேர்தலை வேண்டுமென்றே அக்டோபருக்கு தள்ளிவைத்துள்ளனர். அக்டோபரில் நாடாளுமன்றத் தேர்தலும் வரும். இந்த அரசாங்கம் ஊழல் மிகுந்த அரசாங்கம். கடந்த ஆண்டு நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது மிரட்டல், சதி, ஊழல் எனப் பல மோசமான உத்திகளையும் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தனர்.
லாகூரில் கடந்த சனிக்கிழமை எனது பேரணிக்கு திரண்ட கூட்டம் வரலாற்று சிறப்புமிக்கது. அவ்வளவு பெரிய மைதானத்தை நிரப்பி மக்கள் ஏகோபித்த ஆதரவை நல்கினர். ஆனாலும் மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு திரும்புவது என்பது அரசியல் மாண்புகளுக்குப் பதிலாக வெளிப்படையான வன்முறைகளும், மிரட்டல்களும் மலிந்த இடத்தில் உண்மையிலேயே சவாலான விஷயம் தான்” என்றார். ஆனால், அரசாங்கமோ கான் ஒரு தேசத் துரோகி எனக் கூறுகிறது. உள்துறை அமைச்சர் ரனா சனாவுல்லா கூறுகையில், “கான் ஒரு விரோதி. அவரை குணப்படுத்த முடியாது” என்று குறிப்பிட்டிருந்தார்.