புதுடில்லி, அரிய வகை நோய் சிகிச்சைக்காக இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு, நாளை முதல், சுங்க வரியில் இருந்து விலக்கு அளித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து, மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
அரிய வகை நோய் சிகிச்சைக்காக இறக்கு மதி செய்யப்படும் மருந்துகளுக்கு, சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
அரிய வகை நோய் என, கடந்த 2021ல், மத்திய அரசால் வரையறுக்கப்பட்ட நோய்களுக்கு, இந்த வரி விலக்கு பொருந்தும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் அரிய நோய்களுக்கான சிகிச்சை செலவு, 10 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை ஏற்படுகிறது.
இந்த சிகிச்சை செலவை கருத்தில் வைத்து, இந்த மருந்துகளுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ‘பெம்ப்ரோலிசுமாப்’ உள்ளிட்ட மருந்துகளை வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய, முழுமையாக வரிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த வகை மருந்துகள் தேவைப்படும் நோயாளி கள், சம்பந்தப்பட்ட மாவட்ட, மத்திய சுகாதார ஆய்வாளர்களிடம் சான்றிதழ் பெற்று சமர்ப்பித்தால், இந்த முழு வரி விலக்கு அளிக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுவரை வெளிநாடுகளிலிருந்து, அரிய வகை நோய்களுக்கான மருந்துகளை இறக்குமதி செய்ய, மத்திய அரசு 10 சதவீதம் வரை வரி விதித்திருந்தது. தற்போது முழு வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
76 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
நாட்டில் தரமற்ற மருந்துகள் விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரில், இந்த மாதத்தில் மட்டும், 76 மருந்து நிறுவனங்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 15 நாட்களில், ஒரு சில மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதே போல், ஒரு சில நிறுவனங்கள், மருந்துகள் தயாரிப்பு செய்வதில் இருந்து, ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ள நிலையில், சில மருந்து நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு, ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டுள்ளது. மருந்து நிறுவனங்கள் மீதான இந்த அதிரடி நடவடிக்கையை, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதிப்படுத்தி உள்ளார். இது குறித்து நேற்று அவர் கூறுகையில், ”மருந்துகளின் தரத்தில் சமரசம் செய்யும் யாரும் காப்பாற்றப்பட மாட்டார்கள்,” என்றார்.