அவுரங்காபாத்: மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் நடந்த ராமநவமி விழாவில் இளைஞர்கள் சிலர் மோதிக்கொண்டனர். இதை தடுக்க முயன்ற போலீஸார் மீது 500-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியது.
அவுரங்காபாத் கிரத்புரா பகுதியில் புனரமைக்கப்பட்ட ராமர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ராமநவமி விழா நேற்று முன்தினம் இரவே களைகட்டியிருந்தது. பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், கோயிலுக்கு அருகில் இளைஞர்கள் சிலர் தங்களுக்குள் மோதிக் கொண்டனர். இதையடுத்து 500-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் அங்கிருந்த போலீஸார் மீது தாக்குதல் நடத்தியது.
இதுகுறித்து காவல்துறை ஆணையர் நிகில் குப்தா கூறும்போது, “தாக்குதல் நடத்தியவர்கள் யார் எனத் தெரியவில்லை. அவர்களை தேடிப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். தாக்குதல் சுமார் 1 மணி நேரம் நீடித்தது. ராமர் கோயிலுக்கு சேதம் ஏதுமில்லை. 7 வாகனங்கள் சேதம் அடைந்தன” என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோக்களில் ஏஐஎம்ஐஎம் எம்.பி. இம்தியாஸ் ஜலீல், மாநில பாஜக அமைச்சர் அதுல் சேவ் ஆகியோர் அமைதி ஏற்படுத்த முயன்றதை காண முடிகிறது. இந்த சம்பவத்துக்கு மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பொறுப்பேற்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் சிலர் கூறியுள்ளனர்.
இதுகுறி்தது தேவேந்திர பட்னாவிஸ் நேற்று நாக்பூரில் கூறும்போது, “இந்த சம்பவம் துரதிஷ்டவசமானது. அப்பகுதியில் அமைதியை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிலர் ஆத்திரமூட்டும் வகையில் பேசி சூழலை கெடுக்க முயற்சிக்கின்றனர். இதுபோன்ற சூழ்நிலைகளில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை அரசியல் தலைவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
தவறான கருத்துகளை கூறுவதை தவிர்க்க வேண்டும். அனைவரும் அமைதி காக்க வேண்டும். இந்த சம்பவத்திற்கு யாரேனும் அரசியல் சாயம் பூச முயற்சித்தால் அது துரதிஷ்டவசமானது” என்றார்.