ஐபிஎல் தொடரின் இன்றைய தொடக்க ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை குஜராத் அணி வென்றுள்ளது.
மிரட்டிய மொயீன் அலி
16வது ஐபிஎல் தொடர் அகமதாபாத்தில் இன்று கோலாகமாக தொடங்கியது. இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் சென்னை – குஜராத் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற குஜராத் கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ், கான்வே ஆகியோர் களம் இறங்கினர். இதில் கான்வே 1 ஓட்டத்தில் வெளியேற அடுத்து மொயீன் அலி களம் இறங்கினார்.
அதிரடியில் மிரட்டிய மொயீன் அலி 6வது ஓவரில் ரஷித் கான் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் தப்பித்தார். ஆனால் அதே ஓவரில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
முதல் 6 ஓவர்களில் சென்னை அணி 2 விக்கெட் இழப்புக்கு 51 ஓட்டங்கள் எடுத்தது.
இதையடுத்து ருதுராஜ் உடன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். அதிரடியில் மிரட்டிய ருதுராஜ் ஹர்த்திக்கின் ஓவரில் அடுத்தடுத்து சிக்சர்களை பறக்கவிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.
ருதுராஜ் 50 பந்தில் 92 ஓட்டங்கள்
மறுபுறம் ஸ்டோக்ஸ் 7 ஓட்டங்களில் ஆட்டம் இழக்க, அடுத்து அம்பத்தி ராயுடு களம் இறங்கினார். அதிரடியில் மிரட்டிய ருதுராஜ் 23 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். இதற்கிடையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அம்பத்தி ராயுடு 12 ஓட்டங்களில் வெளியேறினார்.
இதையடுத்து களமிறங்கிய ஷிவம் துபே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுபுறம் அதிரடியில் மிரட்டிய ருதுராஜ் 50 பந்தில் 92 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய ஜடேஜா 1 ஓட்டத்தில் வீழ்ந்தார்.
தொடர்ந்து கேப்டன் தோனி களம் இறங்கினார். 7 பந்துகளை சந்தித்த தோனி 14 ஓட்டங்கள் சேர்த்தார்.
இறுதியில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழபுக்கு 178 ஓட்டங்கள் குவித்தது.
சுப்மன் கில் 36 பந்தில் 63 ஓட்டங்கள்
இதையடுத்து 179 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய சாஹா மற்றும் சுப்மன் கில் தங்கள் பங்கிற்கு அதிரடி காட்டினர்.
சாஹா 16 பந்துகளை எதிர்கொண்டு 26 ஓட்டங்கள் குவித்தார்.
சுப்மன் கில் மறுபக்கம், 36 பந்துகளை சந்தித்து 63 ஓட்டங்கள் குவித்தார். சுதர்சன் (22), பாண்ட்யா (8) விஜய் ஷங்கர் (27) என 5 விக்கெட்டுகளை இழந்து 18.2 ஓவர்களில் 160 ஓட்டங்கள் குவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய தெவாட்டியா மற்றும் ரஷித் கான் ஆகியோர் குஜராத் அனியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
இதனையடுத்து குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வென்றுள்ளது.