நியூயார்க், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரத்தில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது நியூயார்க்கின் மன்ஹாட்டன் நீதிமன்றம் கிரிமினல் குற்றச்சாட்டை பதிவு செய்தது.
இதன் வாயிலாக, கிரிமினல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் முதல் முன்னாள் அதிபர் என்ற அவப்பெயர், டிரம்புக்கு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப், 76, கடந்த, 2017 – 21 வரை, அமெரிக்க அதிபராக பதவி வகித்தார்.
அமெரிக்காவில் மிகப் பெரிய தொழிலதிபராக ஏற்கனவே மக்கள் மத்தியில் அறிமுகமான டிரம்ப், 2006ல், ‘லேக் தஹோய்’ என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறையில் தன்னுடன் பாலியல் உறவு கொண்டதாக, ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ், 44, என்பவர், 2016ல் குற்றஞ்சாட்டினார்.
பின்னடைவு
அப்போது அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த டிரம்புக்கு இது மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் வாய்மூடி இருக்க டொனால்டு டிரம்ப் தனக்கு 1 கோடி ரூபாய் பணம் கொடுத்ததாக ஸ்டார்மி டேனியல்ஸ் குற்றஞ்சாட்டினார்.
இந்த பணத்தை, முன்னாள் அட்டர்னி மைக்கேல் கோஹன் வாயிலாக அவர் வழங்கியதாகவும் தெரிவித்தார்.
அவப்பெயர்
இதை மைக்கேல் கோஹன் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். இதை தொடர்ந்து அவர் 2018 – 20 வரை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிராக, நியூயார்க்கின் மன்ஹாட்டன் நீதிமன்ற நீதிபதி அல்வின் பிராக், கிரிமினல் குற்றச்சாட்டை நேற்று முன்தினம் பதிவு செய்தார்.
இது தொடர்பாக டிரம்பை விசாரணைக்கு ஆஜராகும்படி, அவரது வழக்கறிஞருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
புளோரிடாவில் வசிக்கும் டொனால்டு டிரம்ப், வரும் 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வாய்ப்புஉள்ளதாக அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
இதன் வாயிலாக, கிரிமினல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் முதல் முன்னாள் அதிபர் என்ற அவப்பெயரை டிரம்ப் பெற்றுள்ளார்.
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் மீண்டும் களம் இறங்க திட்டமிட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டு அவரது அதிபர் கனவை தலைகீழாக திருப்பி போட்டுள்ளது.