உதகை: கோடை சீசனின் போது நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு அன்று தொடங்கி ஜூன் மாதம் வரை மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் உதகையில் குதிரை பந்தயங்கள் நடத்தப்படுகின்றன.
இந்தாண்டு 125-வது குதிரை பந்தயம் முன்கூட்டியே நாளை (ஏப்.1) தொடங்கி மே மாதம் 28-ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக பெங்களூரு, சென்னை, புனே உட்பட பல்வேறு இடங்களில் இருந்து பந்தய குதிரைகள் வந்துள்ளன.
முக்கிய பந்தயங்களான ‘நீலகிரி டர்பி’ மற்றும் டாக்டர் எம்ஏஎம் ராமசாமி நினைவு கோப்பை மே 14-ம் தேதியும், ‘நீலகிரி தங்க கோப்பை’ மற்றும் ‘ஊட்டி ஜூவைனல் ஸ்பிரின்ட் கோப்பை’ மே 21-ம் தேதியும் நடக்கின்றன.
இது குறித்து மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகிகள் கூறும்போது, ‘‘ஏப்.1-ம் தேதி தொடங்கி, மே 28 வரை 17 நாட்கள் குதிரை பந்தயங்கள் நடத்தப்படுகின்றன. 550 குதிரைகள் போட்டியில் கலந்துக் கொள்கின்றன. 24 குதிரை பயிற்சியாளர்கள் மற்றும் 37 ஜாக்கிகள் கலந்துகொள்கின்றனர். இந்தாண்டு கோப்பைகள் மற்றும் பரிசுத் தொகையாக ரூ.6.70 கோடி அறிவிக்கப்பட்டுஉள்ளது.
பந்தயங்கள் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மொத்தம் 17 நாட்கள் நடக்கும். முக்கிய பந்தயங்களான ‘தி நீல்கிரிஸ் 1000 கீனிஸ்’ கிரேட் 3 ஏப்.14-ம் தேதியும், ‘தி நீல்கிரிஸ் 2000 கீனிஸ்’ கிரேட் 3 போட்டி ஏப்.15-ம் தேதியும், ‘தி நீல்கிரிஸ் டர்பி ஸ்டேக்ஸ்’ கிரேட் 1 போட்டி மே 7-ம் தேதியும் நடக்கிறது.
நீலகிரி தங்க கோப்பை’ போட்டி மே 7-ம் தேதி நடத்தப்படுகிறது. டாக்டர் எம்ஏஎம் ராமசாமி நினைவு கோப்பை மற்றும் ஊட்டி ஜூவைனல் ஸ்பிரிண்ட் கோப்பை மே 21-ல் நடக்கிறது’’ என்றனர்.