வாஷிங்டன்,
உலக வங்கியின் தலைவர் பதவியில் உள்ள அமெரிக்கர் டேவிட் மால்பாஸ், ஜூன் மாதம் 30-ந் தேதியில் இருந்து பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது. உலக வங்கியில் பெருமளவு பங்குகளை அமெரிக்காவே கொண்டிருப்பதால், அந்த நாட்டினர்தான் தலைவர் பதவிக்கு வர முடியும்.
இந்தப் பதவிக்கு இந்திய வம்சாவளியான அஜய் பங்கா (வயது 63) பெயரை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த மாதம் அறிவித்தார். அவரை எதிர்த்து வேறு எந்த நாடும் தலைவர் பதவிக்கு யாரையும் நிறுத்தவில்லை. இதற்கான வேட்பு மனு தாக்கல் அவகாசம் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. எனவே அஜய் பங்கா, உலக வங்கித்தலைவராக போட்டியின்றி தேர்வு ஆகிறார்.
பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தரை பூர்விகமாகக் கொண்டுள்ள அஜய் பங்கா, தற்போது ஜெனரல் அட்லாண்டிக் என்ற பங்கு நிறுவனத்தின் துணைத்தலைவராக பணியாற்றி வருகிறார். அஜய் பங்காவின் தேர்வு, உலக வங்கியின் இயக்குனர் குழுவால் உறுதி செய்யப்படும். உலக வங்கியின் தலைவராக அஜய் பங்கா 5 ஆண்டு காலத்துக்கு பதவி வகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.