அகமதாபாத்: குஜராத் அணிக்கு எதிராக இன்று சிஎஸ்கே வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் செய்த காரியம் ஒன்று மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
சிஎஸ்கே குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஐபிஎல் 2023 தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. முதல் ஆட்டமே சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது.
கடந்த முறை சாம்பியன்ஸ் பட்டம் வென்ற குஜராத் அணி 9வது இடம் பிடித்த சிஎஸ்கேவை எதிர்கொள்கிறது. இன்னொரு பக்கம் சிஎஸ்கே அணி முதலில் சில போட்டிகளை ஜடேஜா கேப்டன்சியில் ஆடியது. மொத்த சீசனில் வெறும் 4 போட்டிகளை மட்டுமே சிஎஸ்கே வென்ற நிலையில் மோசமாக ஆடி வெளியேறியது. இந்த நிலையில்தான் இன்று நடக்கும் போட்டியை வெற்றியோடு தொடங்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
சிஎஸ்கே
இன்று ஆடும் சிஎஸ்கே அணி வலுவான பேட்டிங் படையோடு இறங்கி உள்ளது. பெரும்பாலும் பவுலிங் செய்யும் போது கூடுதலாக ஒரு பவுலர் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது களமிறக்கப்பட்டு உள்ள சிஎஸ்கே அணியில் டெவோன் கான்வாய் , ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், அம்பதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(w/c), மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
விக்கெட்
இதில் சிஎஸ்கே அணி பேட்டிங் இறங்கியதும் கொஞ்சம் நிதானமாகவே ஆட தொடங்கியது. பொதுவாக கான்வே மெதுவாக ஆட கூடியவர். முதல் 10 பந்துகளை மெதுவாக ஆடி அதன்பின் வேகம் எடுக்க கூடியவர். ஆனால் இன்று தொடக்கத்தில் இருந்து கான்வே மிகவும் மெதுவாக ஆடினார். அதோடு பந்து சரியாக பேட்டில் மாட்டாமல் திணறினார். 6 பந்துகள் பிடித்தவர் வெறும் 1 ரன் மட்டுமே எடுத்தார். அதன்பின் ஷமி பந்தில் கிளீன் போல்ட் ஆனார்.
என்ன நடந்தது
அதன்பின் களமிறங்கிய மொயின் அலி ருத்துராஜுடன் சேர்ந்து வேகமாக ஆட தொடங்கினார். இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா ஓவரில் ருத்துராஜ் வேகம் காட்டி பவுண்டரி அடித்தார். அதன்பின் ஜோஷ்வா லிட்டில் குஜராத் அணிக்காக பவுலிங் செய்ய வந்தார். ஜோஷ்வா லிட்டில் அயர்லாந்தை சேர்ந்தவர். ஐபிஎல் போட்டி ஒன்றில் அயர்லாந்து வீரர் ஆடுவது இதுவே முதல்முறையாகும். ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை அந்த வீரர் களமிறங்குகிறார். 23 வயதே ஆன இவர் வலது கை பேட்ஸ்மேன், இடதுகை பவுலர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெல்கம்
இந்த நிலையில் பவுலிங் போட வந்த ஜோஸ்வாவை முதல் பந்திலேயே சிக்சருக்கு பறக்கவிட்டார் ருத்துராஜ். அதன்பின் அவரின் இரண்டாவது பந்திலேயே பவுண்டரி அடித்தார். ஐபிஎல் முதல் போட்டியிலேயே சிக்ஸ், பவுண்டரி என்று கொடுத்ததால் லிட்டில் கொஞ்சம் அதிர்ச்சியில் உறைந்து போனார். அதன்பின் ஹர்திக் பாண்டியா அவரிடம் வந்து வழிகாட்டினார். அதன்பின் மொயின் அலியும் இவரின் ஓவரில் பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் மட்டும் 16 ரன்கள் சென்றது. சிஎஸ்கே அணி துவண்டு இருந்த நிலையில் லிட்டில்தான் வந்து அணியை மீட்டு கொடுத்தார். ஆனால் முதல் போட்டியிலேயே லிட்டிலுக்கு கிடைத்த வரவேற்பை பார்க்க கொஞ்சம் பாவமாகவே இருந்தது.