கராச்சி, பாகிஸ்தானில், ஹிந்து சிறுமியரை கடத்தி, கட்டாய மத மாற்றம் செய்து, திருமணம் செய்யும் சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து, ஹிந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், சிறுபான்மையினராக உள்ள ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த சிறுமியர் மற்றும் பெண்களை, வலுக்கட்டாயமாக, முஸ்லிம் மதத்திற்கு மத மாற்றம் செய்து, திருமணம் செய்யும் சம்பவங்கள், சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன.
இதற்கு, அங்குள்ள ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதையடுத்து, கராச்சியில், சிந்து சட்டசபை கட்டடத்தில் உள்ள கராச்சி பத்திரிகை அலுவலகம் அருகே, நேற்று முன்தினம், ஹிந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின.
இது குறித்து போராட்டத்தில் பங்கேற்ற ஒருவர் கூறியதாவது:
எங்கள் போராட்டம் அமைதியான முறையில் நடந்தது. சிறுபான்மையினர் சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை உலகிற்கு எடுத்துக்காட்டவே இந்த போராட்டத்தை நடத்தினோம்.
கிராமப்புறங்களில் வசிக்கும் ஹிந்து சிறுமியரை, பட்டப்பகலில் கடத்திச் சென்று, கட்டாய மத மாற்றம் செய்து, வயதான முஸ்லிம் ஆண்களுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இந்த சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, அரசு உடனடியாக மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.