கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10ஆம் தேதி வாக்குப்பதிவும், 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. இதையொட்டி
காங்கிரஸ்
, பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. அடுத்தகட்டமாக வேட்பாளர்கள் பட்டியல், தேர்தல் பிரச்சாரம், வாக்குறுதிகள் என தேர்தல் களம் சூடுபிடிக்கவுள்ளது. இந்நிலையில் எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக எம்.எல்.ஏ ராஜினாமா
இன்றைய தினம் குட்லிகி சட்டமன்ற தொகுதி பாஜக எம்.எல்.ஏ என்.ஒய்.கோபாலகிருஷ்ணா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக தன்னுடைய ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் விஸ்வேஷ்வர் ஹெக்டே ககேரி அலுவலகத்தில் அளித்தார். இதற்கிடையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஆகியோரை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் பின்னணி
இதன்மூலம் காங்கிரஸ் கட்சியில் சேர அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. முன்னதாக கோபாலகிருஷ்ணா காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தார். சித்ரதுர்கா மாவட்டம் மொலகல்முரு தொகுதியில் 1997, 1999, 2004, 2008 என நான்கு முறை வெற்றி பெற்றிருக்கிறார். கடந்த 2018ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால் கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் சேர்ந்தார்.
நெருங்கும் சட்டமன்ற தேர்தல்
அப்போது குட்லிகியில் போட்டியிட சீட் கொடுத்தனர். அங்கு வெற்றியும் பெற்றார். இந்த சூழலில் 2023 சட்டமன்ற தேர்தலுக்கு ஒருமாதமே இருக்கும் நிலையில் அதிரடி முடிவை எடுத்துள்ளார். இதேபோல் அர்கல்குட் தொகுதி மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ ஏ.டி.ராமசாமி இன்று தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இவர் பாஜகவில் சேரப் போகிறாரா? இல்லை காங்கிரஸ் கட்சியில் இணைகிறாரா? என இதுவரை தெரியவில்லை.
சிக்கலில் மதச்சார்பற்ற ஜனதா தளம்
ஒரே வாரத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த எம்.எல்.ஏ பதவி விலகுவது இது இரண்டாவது முறை ஆகும். ராஜினாமாவிற்கு பின்னர் ஏ.டி.ராமசாமி பேசுகையில், மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியில் இருந்து நான் வெளியேறவில்லை. அவர்கள் தான் என்னை வெளியேற்றி விட்டனர். பணம், அதிகாரம் ஆகியவற்றுக்கு மத்தியில் நானும் ஒரு பலிகடா ஆகிவிட்டேன். உரிய ஆலோசனை நடத்தி எதிர்காலம் குறித்து முடிவு செய்வேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்தடுத்து விலகல்
இம்மாத தொடக்கத்தில் பாஜகவை சேர்ந்த மேலவை உறுப்பினர்கள் புட்டன்னா, பாபுராவ் சுன்சன்சூர் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து காங்கிரஸில் இணைந்தனர். கடந்த 27ஆம் தேதி மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ஸ்ரீனிவாஸ் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தார். வழக்கமாக பாஜக தான் ஆபரேஷன் என்ற பெயரில் எதிர்க்கட்சிகளில் இருந்து முக்கிய புள்ளிகளை தட்டி தூக்கும்.
கர்நாடகாவில் சற்றே திருப்புமுனையாக காங்கிரஸ் அதிரடி காட்டி வருகிறது. இவை அனைத்திற்கும் பின்னணியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டிய வியூகம் இருக்கிறது. இவ்வாறு மாஜிக்களை வளைக்க ஸ்வீட் பாக்ஸ்கள் பெட்டி பெட்டியாய் கைமாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.