காஞ்சிபுரம் மாநகராட்சியில், கடந்த, 24ஆம் தேதி நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில், நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் விபரங்களை, எந்த ஒரு முன்னறிவிப்பு இல்லாமல், கவுன்சிலர்களுக்கு வழங்கப்பட்டது. கூட்டம் முடிந்த பிறகுதான் கவுன்சிலர்களுக்கு அவை பட்ஜெட் விபரம் என்பது தெரியவந்துள்ளது. இதைப்பார்த்து கவுன்சிலர்கள் அனைவரும் பேரதிர்ச்சி அடைந்தனர்.
இதில் சில கவுன்சிலர்கள் தங்களது வார்டு புறக்கணிக்கப்படுகிறது, தனி நபர்களின் ஆதிக்கம் இருக்கிறது என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் தங்களது புகார் மனுக்களை அளித்துள்ளனர்.
அதில், காஞ்சிபுரம் மாநகராட்சியின் 45 ஆவது வார்டில் உள்ள அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் கட்டுவது, பூங்காக்கள் சீரமைப்பது, கழிவு கால்வாய் பழுது உள்ளிட்ட கோரிக்கையையும் மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை.
மாநகராட்சியின் 16 ஆவது வார்டில், வேல்முருகன் என்பவர் கவுன்சிலர் போல் தன்னிச்சையாக செயல்படுகிறார்.46 ஆவது வார்டில் உள்ள மக்களுக்கு பாலாற்று குடிநீர் கிடைக்கவில்லை
அதுமட்டுமல்லாமல், மேயரின் நேர்முக உதவியாளர் என்று கூறிக்கொண்டு பிரகாஷ் என்பவர், அதிகாரிகளை மிரட்டுகிறார். மாமன்றத்தில் பேசும் போது, ஒரு சில கவுன்சிலர்கள் கூச்சலிடுகிறார்கள். மாமன்ற கூட்டத்தை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் எங்களுக்கு மாநகராட்சி பட்ஜெட் வழங்கப்பட்டுள்ளது என புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.