கும்பகோணம்: கும்பகோணத்தில் ரூ.1.50 கோடி மதிப்பில் கட்டப்படும் வணிக வளாகத்தில் கருணாநிதி சிலை அமைக்க மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. கும்பகோணம் பழைய நகராட்சி அலுவலக கட்டிடத்தில் மாநகராட்சி உறுப்பினர்களுக்கான அவசர கூட்டம் நடைபெற்றது. மேயர் க.சரவணன் தலைமை வகித்தார், துணை மேயர் சு.ப.தமிழழகன், ஆணையர் (பொறுப்பு) லலிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பேசிய மாமன்ற உறுப்பினர்கள், ”மாநகராட்சி வார்டு 38-ல் உள்ள பள்ளிக்கு அருகிலுள்ள மழைநீர் வடிகால் வாய்க்கால் முழுமையாகச் சுத்தம் செய்தும், தண்ணீர் ஒடவில்லை, சாரங்கபாணி கோயிலின் பெரிய தேரின் கீழே மழை நீர் தேங்குவதால், பெரும் அவஸ்தைக்குள்ளாகின்றனர்.
தாராசுரம் பகுதியிலுள்ள புறம்போக்கிலிருந்த பல லட்சம் மதிப்புள்ள சுமார் 200 தைல மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளது குறித்தும், கும்பகோணம் மாநகரப் பகுதிகளிலுள்ள புதை சாக்கடை கழிவு நீர் பல இடங்களில் வழிந்து ஓடுவதைச் சீர் செய்ய தரமான ஒப்பந்தக்காரரைக் கொண்டு பணிகளை மேற்கொண்டு கழிவு நீர் ஓடாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கவரைத்தெருவில் பல மாதங்களாகக் கழிவு நீர் தெருக்களில் ஓடுவதைச் சீர் செய்ய வேண்டும், தாராசுரத்திலுள்ள தொடக்கப்பள்ளியிலுள்ள மாணவ, மாணவிகள் பயன்படுத்தும் சுகாதார வளாகங்களைச் சுத்தப்படுத்த வேண்டும், இதே பகுதியிலுள்ள கடைத்தெருவில் மழைக் காலங்களில் தெப்பம் போல் மழை நீர் தேங்கி நிற்காதவாறு பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என்றனர்.
மேலும், “பொருள் எண் 4-ல், பழுந்தடைந்த வாகனங்களைச் சரி செய்யக் கோரப்பட்டுள்ள 3-வது விலைப்புள்ளியில், கும்பகோணம், சங்கம் திரையரங்கம் அருகில், 13-ராம்கே ரோடு, அன்னை சந்தியா என்ஜீனியரிங் என அச்சிடப்பட்டிருந்தது குறித்து உறுப்பினர் செல்வம், இந்த விலாசம் எங்குள்ளது, யார் வழங்கியது எனக் கேள்வி கேட்டார். அதற்குப் பதிலளித்த அதிகாரிகள், அதிர்ச்சியடைந்து, உடனடியாக விலாசத்தைச் சரிபார்த்து மாற்றி அச்சிட்டு வழங்குகின்றோம்” எனத் தெரிவித்தனர்.
பல அதிகாரிகள் கலந்தாலோசித்து,மாமன்ற தீர்மானத்தை தயார் செய்யும் நிலையில், இது போன்ற தவறுகள் நடைபெறும் போது, அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாமன்ற உறுப்பினர்கள் செய்தியளர்களிடம் தெரிவித்தனர். புகாருக்கு பதிலளித்த ஆணையர் (பொறுப்பு) லலிதா, ”உறுப்பினர்களின் அனைத்து கேள்விகளுக்கும் தீர்வு காண்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, நாகேஸ்வரன் கோயில் திருமஞ்சன வீதியில் சுமார் ரூ. 1 கோடியே 50 லட்சம் மதிப்பில் கட்டுப்பட்டு வரும் வணிக வளாகத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரையும், அவரது சிலையை அங்கு நிறுவுவது, ஒலைப்பட்டிணம் வாய்க்காலுக்கு முன்னாள் அமைச்ச கோ.சி.மணி பெயரைச் சூட்டுவது, ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்த மத்திய அரசுக்குக் கண்டனத்தைத் தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.