சங்கரன்கோவில்: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் லட்சுமிபுரம் 7ம் தெருவைச் சேர்ந்த தம்பதியர் முருகன், செல்வி. இவர்கள் சங்கரன்கோவிலில் கடந்த 45 வருடமாக இட்லி கடை நடத்தி வருகின்றனர். இந்த கடையில் தற்போது இட்லி, வடை 2 ரூபாய்க்கும். டீ, முறுக்கு, அதிரசம் 5 ரூபாய்க்கும், பொங்கல் 10 ரூபாய்க்கும் நல்ல தரத்துடன் கொடுத்து வருகின்றனர். இவர்கள் கடை வைத்திருக்கும் பகுதி நெசவாளர்கள், கூலித்தொழிலாளர்கள் நிறைந்தது. தொழிலாளர்களின் பசியை போக்கும் வகையில் மிகக்குறைந்த விலையில் ஒரு சேவையாக இந்த தம்பதியினர் இதை நடத்தி வருகின்றனர். குறைந்த விலை என்பதால் தொழிலாளர்கள் இங்கு சாப்பிட்டு தங்கள் பசியை போக்குகின்றனர். அதிகாலை 5 மணிக்கு கடை திறந்து, 9 மணி வரை இட்லி, வடை, இனிப்பு வகைகள், பொங்கல், பஜ்ஜி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
மதியம் 2மணி வரை டீ, பஜ்ஜி, வடையும் வழங்குகின்றனர். இதுகுறித்து முருகன் கூறுகையில், கடந்த 45 வருடத்துக்கு முன்னாடி இந்த கடை ஆரம்பித்த போது வெறும் காலணாவில் (25 பைசா) இருந்து படிப்படியாக ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்து கொண்டிருந்தேன். விலைவாசி கூடுயதால் தற்போது 2 ரூபாய் ஆக்கிட்டேன். இந்த தொழிலை லாபத்துக்காக செய்யாமல் சமூக சேவையாக செய்து வருவதாக தெரிவித்தார். இவர்களுக்கு 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ஒரு மகன் அரசு போக்குவரத்துக் கழகத்திலும், மற்றொருவர் ஆசிரியராகஅரசு பணியிலும், ஒருவர் பிசியோதெரபி மருத்துவராகவும், இன்னொருவர் பொறியாளராகவும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது.