சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கூடுதல் விலைக்கு உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் ஆட்டத்தை பார்க்க சென்ற சண்முகராஜன் என்ற ரசிகர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து உள்ளார்.
ந்த வழக்கில் மைதானத்தில் இருக்கக்கூடிய உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை கடுமையான விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அவரின் அந்த மனுவில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டு களிக்கக்கூடிய இந்த மைதானத்தில், வரக்கூடிய ரசிகர்களுக்கு இலவசமாக குடிநீர் வசதி இல்லை, சுத்தமான கழிப்பறை இல்லை.
இலவச குடிநீர் இல்லாத நிலையில், ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலை உடைத்து, 100 எம்எல் தண்ணீர் 10 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் நூறு ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு குளிர்பான பாட்டில் 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சாதாரண ஒரு சமோசா 50 முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சாம்பார், தயிர் சாதங்கள் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 100 சதவீதம் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மைதானத்தில் இனி நடக்க உள்ள கிரிக்கெட் போட்டிகளை பார்க்க வரும் ரசிகர்களுக்கு, என்னைப்போல் சூழ்நிலை நிலவ கூடாது. எனவே இதை பொதுநல வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவரின் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம், இது குறித்து பதில் மனு அளிக்க கால அவகாசம் கோரியது. இதனை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை தள்ளி வைத்துள்ளது.