புழல்: செங்குன்றம் அருகே எடப்பாளையம் பகுதியில் உள்ள சோழவரம் ஏரியில் நேற்று காலை சுமார் 32 வயது மதிக்கத்தக்க வாலிபரின் சடலம் மிதந்து கொண்டிருந்தது. தகவலறிந்த சோழவரம் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து, சடலத்தை மீட்டு விசாரித்தனர்.அதில், சடலமாக கிடந்தவர், அதே பகுதியில் உள்ள பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த பார்த்திபன் (32) என்பதும், இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருப்பதும், சரக்கு வேன் ஓட்டி வந்ததும், கடந்த சில நாட்களுக்கு முன் லோடு ஏற்றிச் சென்ற பார்த்திபன், நேற்று முன்தினம் இரவு வரை வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, சடலத்தை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடன் தொல்லையால் இவர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடிபோதையில் அவரை யாரேனும் ஏரிக்குள் தள்ளிவிட்டார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.