சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த மலைப்பகுதியான நீலகிரியின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் வகையில், சில கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கின்றன. இந்தியப் புவியியல் ஆய்வு அமைப்பால் நிலச்சரிவு அபாயம் உள்ள மாவட்டங்களின் பட்டியலில் நீலகிரி இடம்பெற்றிருக்கிறது. நிலச்சரிவு அபாயமுள்ள 283 இடங்கள் இங்கு கண்டறியப்பட்டிருக்கின்றன.
ஜே.சி.பி, பொக்லைன்கள் மூலம் மலைகளைக் குடைவது, பாறைகளை வெடிவைத்து உடைப்பது போன்ற செயல்களுக்கு இங்கு தடை இருக்கிறது. மேலும், ரிக் வாகனங்கள் மூலம் அதிக அளவில் ஆழ்துளைக் கிணறுகளை அமைப்பதால் நிலச்சரிவு அபாயம் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக, நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியர் 2017-ம் ஆண்டு முதல் `நீலகிரியில் ஆழ்துளைக் கிணறு அமைக்க தடை’விதித்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில், ஊட்டி அருகிலுள்ள காந்திபேட்டை மலைச்சரிவில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் ரிக் வாகனம் மூலம் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும், `நீலகிரியில் ஆழ்துளைக் கிணறு அமைக்க இருந்த தடை நீக்கப்பட்டிருக்கிறது. தேவைப்படுவோர் அனுமதி பெற்று ஆழ்துளைக் கிணறு அமைத்துக் கொள்ளலாம்’ என்ற ஆடியோவும் வெளியாகி கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித்தைத் தொடர்பு கொண்டு பேசினோம். “ஆழ்துளைக் கிணறு அமைக்க தடைவிதித்து முன்னாள் ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார். கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுத்துறைகளின் குடிநீர் தேவைக்காக சில சமயங்களில் அனுமதி வழங்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அதன் அடிப்படையிலேயே தற்போது ஒரு கல்வி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது” என்றார்.