மாண்டியா: எனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன் என்று கன்னட நடிகை ரம்யா ஸ்பந்தனா தெரிவித்தார். கர்நாடகா சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மக்களவை முன்னாள் உறுப்பினரும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், கன்னட நடிகையுமான ரம்யா ஸ்பந்தனா, தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘எனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன். நாடாளுமன்ற நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்றேன்.
அந்த நேரத்தில், ராகுல் காந்தி எனக்கு தைரியம் அளித்தார். அதன்பின் எல்லாவற்றையும் படிப்படியாகக் கற்றுக்கொண்டேன். எனக்குள் இருந்த கவலைகளை மறக்க, எனது பணியில் ஆர்வம் காட்டினேன். மாண்டியா மக்கள் எனக்கு நம்பிக்கை அளித்தனர். என் வாழ்க்கையில் மிகப்பெரிய மதிப்புக்கு உரியவர் எனது தாய், அதற்கு அடுத்தது என் தந்தை, மூன்றாவது இடத்தில் ராகுல் காந்தி உள்ளார்’ என்றார். நடிகை ரம்யா ஸ்பந்தனா, கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.