ஆவடி: தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் மற்றும் சுகாதார அலுவலர் மாநில சங்கம் சார்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். சுகாதார அலுவலர் சங்கம் மாநிலத் தலைவர் ஆல்பர்ட் அருள்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சட்டசபை கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் நகராட்சி நிர்வாகத் துறையின் மானிய கோரிக்கையில், மொத்தம் 19 நகராட்சிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது என வெளியாகியது. இதில், பெரம்பலூர், திருவள்ளூர், விழுப்புரம். திருவேற்காடு, பூந்தமல்லி, தென்காசி, நந்திவரம் கூடுவாஞ்சேரி, திருவாரூர் திருத்தணி போன்ற நகராட்சிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நகராட்சி துறைக்கு நன்மைகள் பல கிடைக்கும்.
நிறைய சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார அலுவலர் பணியிடங்கள் மற்றும் இதர பிற பிரிவுகளான பொது பிரிவு, பொறியியல் பிரிவு, நகரமைப்பு பிரிவு, வருவாய் பிரிவுகளிலும் புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. கூடுதலாக பணியிடங்கள் தோற்றுவிப்பதனால் வேலைகள் எளிதாகும். மக்களுக்கான சேவையில் தாமதம், தொய்வு ஏற்படாது. பதவி உயர்விற்காக வெகுதூரம் செல்ல வேண்டியதில்லை. அரசின் திட்டங்கள் கடைகோடி மக்களுக்கும் எளிதில் சென்றடையும். மேலும், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் அமைப்புகள் சட்டம் 1998யை நடைமுறைபடுத்த உரிய விதிகள் விரைவில் தோற்றுவிக்கப்படும் என நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு அனைவருக்கும் மகிழ்ச்சி தருவதாக அமைந்துள்ளது.
எனவே, நகராட்சிகளின் தரம் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர், நகராட்சி நிர்வாக துறை மற்றும் குடிநீர் வழங்கு துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர், நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர், உயர் அலுவலர்களுக்கும் தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர், சுகாதார அலுவலர் சங்கம் நன்றியினை மாநிலத் தலைவர் ஆல்பர்ட் அருள்ராஜ் இந்த அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.