ரோகிணி தியேட்ட சர்ச்சை
கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான ‘பத்து தல’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகின. சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கிலும் இந்த திரைப்படம் வெளியாகியது. அப்போது, அந்த திரைப்படத்தை பார்ப்பதற்காக கையில் டிக்கெட்டுகளுடன் சென்ற நரிக்குறவர் குடும்பங்களை ரோகிணி திரையரங்க ஊழியர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை.
டிக்கெட் இருந்தாலும் நீங்கள் எல்லாம் உள்ளே செல்லக்கூடாது எனக் கூறி அவர்களை ரோகிணி திரையரங்க நிர்வாகத்தினர் விரட்டினர். அப்போது அங்கிருந்தவர்கள், எதற்காக அவர்களை உள்ளே விட மறுக்கிறீர்கள் எனக் கேட்டு பிரச்சினை செய்துள்ளனர். இதையடுத்து, பிரச்சினை பூதாகரமாவதை உணர்ந்த ரோகிணி திரையரங்க நிர்வாகம் நரிக்குறவர் மக்களை உள்ளே அனுமதித்தது.
வைரலான வீடியோக்கள்
இதுதொடர்பான வீடியோக்கள்தான் இரண்டு நாட்களாக ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகின்றன. இந்த சம்பவத்தை முன்வைத்து அரசியல் கட்சியினர், பொதுமக்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் ரோகிணி திரையரங்க நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
தியேட்டர் நிர்வாகத்தின் விளக்கம்
இந்தசூழலில் நரிக்குறவர் குடும்பத்தை அனுமதிக்காதது தொடர்பாக ரோகினி தியேட்டர் நிர்வாகம் விளக்கம் அளித்தது தற்போது சர்ச்சையாகியுள்ளது. இது குறித்து ரோகினி தியேட்டர் நிர்வாகம் அளித்த விளக்கத்தில், ‘‘பாத்து தல படத்தின் திரையிடலுக்கு முன் எங்கள் வளாகத்தில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். ஒரு சில செல்லுபடியாகும் டிக்கெட்டுகளுடன் தங்கள் குழந்தைகளுடன் தனிநபர்கள் ‘பத்து தல’ படம் பார்க்க திரையரங்கிற்குள் நுழைய முயன்றுள்ளனர்.
பத்து தல படம் சென்சார் போர்ட் அதிகாரிகளால் U/A என்ற சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சட்ட விதிகளின் படி 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் U/A சான்றிதழ் பெற்ற எந்த திரைப்படத்தையும் பார்க்க அனுமதி இல்லை. அதன் காரணமாகவே எங்கள் டிக்கெட் சோதனை ஊழியர்கள் 2, 6, 8 மற்றும் 10 வயது குழந்தைகளுடன் வந்திருந்த குடும்பத்தை வளாகத்திற்குள் அனுமதிக்க வில்லை.
இருப்பினும் பார்வையாளர்கள் திரண்டதால் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை தவிர்க்கவும், உணர்வற்ற தன்மையை குறைக்கவும் அதே குடும்பம் சரியான நேரத்தில் திரைப்படத்தைப் பார்க்க அனுமதிக்கப்பட்டது’’ என தியேட்டர் நிர்வாகம் விளக்கம் அளித்தது.
கலாய்க்கும் நெட்டிசன்கள்
ஆனால் அதே தியேட்டர் நிர்வாகம், நடிகர் விஜய் நடித்த U/A சான்றிதழ் பெற்ற மெர்சல் திரைபட்டத்தை குழந்தைகளுக்கு திரையிட்டது, மேலும் ஆதரவற்ற குழந்தைகளுக்காக மெர்சல் படத்தை சிறப்பு காட்சிகளையும் திரையிட்டது குறித்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதேபோல் தியேட்டர் நிர்வாகம் கொடுத்த தகவலும் தவறானது என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அதாவது சினிமாட்டோகிராஃப் (சான்றிதழ்) விதிகள், 1983-ன் படி, யு/ஏ சான்றிதழ் பெற்ற படங்களை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் அனுமதித்தால் பார்க்கலாம். தியேட்டர் நிர்வாகத்திற்கு இதில் எந்த கருத்தும் இல்லை என கூறுகிறது. பிறகு ஏன் இப்படி ஒரு அநாகரிக அறிக்கை கொடுத்தீர்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.