சென்னை: கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் அம்பாசமுத்திரம் ஏஏஸ்பி பல்வீர் சிங்கிற்கு எதிராக மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வரும் நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவை சேர்ந்த வழக்கறிஞர் அளித்த புகாரை தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பியாக பணியாற்றியவர் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்.
அம்பை காவல் உட்கோட்ட பகுதியில் உள்ள காவல் நிலைய எல்லை பகுதிகளில் சிறிய குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை, காவல் அதிகாரி பல்வீர் சிங் கொடூரமாக சித்ரவதை செய்ததாக எழுந்த புகார் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பல்வீர் சிங் இடைநீக்கம்
அதாவது, காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்படும் நபர்களின் பற்களை கொடூரமாக பிடுங்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த விசாரணை அதிகாரியாக சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் நியமிக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக உதவி கலெக்டர் முகம்மது சபீர் விசாரணை நடத்தி வருகிறார்.
ஆறு வாரத்திற்குள் அறிக்கை
காவல்துறை அதிகாரி விசாரணை கைதிகளிடம் சித்ரவதை செய்தது தொடர்பாக செய்தி ஊடகங்களில் வெளியானதன் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. புகார் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை பிரிவு ஐஜி ஆறு வாரத்திற்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஆணைய தலைவர் பாஸ்கரன் உத்தரவிட்டிருந்தார்.
கொல்கத்தாவை சேர்ந்த வழக்கறிஞர்
மேலும் புகாருக்கு உள்ளான ஏஎஸ்பி பல்வீர் சிங் வரும் ஏப்ரல் 3-ம் தேதி மாநில மனித உரிமை ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில், காவல்துறை அதிகாரி பல்வீர்சிங்கிற்கு எதிராக தேசிய மனித உரிமைகள் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவை சேர்ந்த வழக்கறிஞர் ஆசிஸ் கோயல் என்பவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
மனித உரிமை ஆணையத்தில்
இந்த புகாரை தேசிய மனித உரிமைகள் ஆணையமும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. பற்களை பிடுங்கிய விவகாரத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையமும் விசாரணை நடத்தி வரும் நிலையில் தேசிய மனித உரிமை ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.