புதுடில்லி,-பஞ்சாபில், 1988ல் நடந்த கொலை வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து முன்கூட்டியே இன்று விடுதலையாகிறார்.
பஞ்சாபை சேர்ந்தவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, 1988ல் பட்டியாலாவில் காரில் வந்த போதுஅவ்வழியாக மற்றொரு காரில் வந்தவர்கள் வழிவிடும்படி கூறியுள்ளனர். இதில் நடந்த மோதலில், காரை ஓட்டி வந்த குர்னாம் சிங் என்பவரை தாக்கியதில் அவர் உயிரிழந்தார். சித்து மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
1999ல், விசாரணை நீதிமன்றம், அவரை கொலை வழக்கில் இருந்து விடுவித்தது. ஆனால், பஞ்சாப் உயர் நீதிமன்றம் மூன்று ஆண்டு சிறை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தது. .இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வயதான ஒருவருக்கு காயமேற்படுத்திய பிரிவில் சித்துவை குற்றவாளியாக அறிவித்தது.
34 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கில் கடந்தாண்டு மே மாதம் சித்துவுக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.. இதையடுத்து அவர் பாட்டியாலா சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். இந்நிலையில தண்டனை காலம் நிறைவடைய இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், முன்கூட்டியே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதையடுத்து இன்று விடுதலையாகிறார்.
Advertisement